ஹதீஸ் கலை
ஹதீஸ் கலை
அல் ஹதீஸ்
நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் அனைத்தையும் அல் ஹதீஸ் என்ற வார்த்தை உள்ளடக்கிக் கொள்ளும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.
ஹதீஸ் கலை
இந்த ஹதீஸை ஆதாரமானது, (நபி (ஸல் ) அவர்களுடன் தொடர்புபடுத்தி நிரூபிக்கப்பட்ட செய்தி ) எனவும் ஆதாரமற்றது (நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்தி நிரூபிக்கப்படாத செய்தி எனவும் இரு வகையாக தரம் பிரிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள்.
இவ்வாறு நபி (ஸல் ) அவர்களுடன் தொடர்புபடுத்தி வரக்கூடிய செய்திகளின் நம்பகத் தன்மையை இனங்கண்டு அவற்றில் உண்மையானது எது ? பொய்யானது எது ? எனக் கண்டுபிடிக்கும் முயற்சியின் பின்னணியில் தோன்றிய ஓர் கலைதான் ஹதீஸ்கலை என்று அழைக்கப்படும். இக்கலையைத் தோற்றுவித்த இமாம்கள் `அல் முஹத்திதூன்" என அழைக்கப்படுகின்றனர்.
தோற்றம்
அல்குர்ஆனின் வசனங்கள் நபி(ஸல் ) அவர்கள் உயிருடன் இருக்கும்போதே பல வழிகளிலும் எழுதி வைக்கப்பட்டு பாதுகாப்தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவ்வாறு நபி (ஸல் ) அவர்களின் ஹதீஸ் நபி (ஸல் ) அவர்களின் காலத்தில் எழுதிப் பாதுகாக்கப்படவில்லை. என்றாலும் அப்துல்லாஹ் பின் அம்ரு இப்னு ஆஸ் (ரலி ) நபி (ஸல் ) அவர்களிடமிருந்து செவிமடுத்த சில செய்திகளை எழுத்து வடிவில் பாதுகாக்க முயற்சித்தும் அவர் எழுதி வைத்த முழுமையான ஏடு பின்னுள்ளவர்களுக்கு கிடைக்கவில்லை .
ஸஹாபாக்கள் காலம்
ஒரு நபித்தோழர் நபி (ஸல் ) அவர்களிடமிருந்து ஒரு செய்தியைத் தெரிந்துகொண்டால் அவர் அதனை மனமிட்டு மற்றவருக்கும் அதனை அக்காலப்பகுதியில் எத்திவைப்பவராக இருந்தார் ``என்னைத் தொட்டும் ஒரு வசனமாக இருந்தாலும் அதை எத்தி வையுங்கள்" என்ற நபிகளாரின் இறுதிக் கட்டளையைத தெரிந்த நபித் தோழர்கள் ஒவ்வொருவரும் அக்க்ட்டளைக்கிணங்க எத்திவைக்கும் பொறுப்பை முடியுமானவரை நிறைவேற்றக் கூடியவர்களாக இருந்தனர். இந்தவேளையில் அவர்கள் நபி (ஸல் ) அவர்களின் மற்றொரு எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ளத் தவறவில்லை.
``யார் என்மீது வேண்டுமென்று பொய் கூறினாரோ அவருக்குரிய இடத்தை நரகில் அவர் எடுத்துக் கொள்ளட்டும்"
இதுதான் நபி (ஸல் ) அவர்களின் அந்த எச்சரிக்கையாகும். இதனால் சஹாபாகளில் எவரும் நபி (ஸல் ) அவர்களைத் தொட்டும் ஒரு செய்தியை சொல்லும்போது பொய் கூறியதாக யாரும் யாரையும் சந்தேகப் படுபவர்களாக இருக்கவில்லை. மாறாக இந்த விடயத்தில் ஒருவரை ஒருவர் உறுதிப்படுத்துபவர்களாகவே இருந்தார்கள். இது தொடர்பாக சில சஹாபாக்களின் கூற்றுக்களைப் பார்ப்போம்.
அனஸ் (ரழி ) அறிவிக்கிறார்கள்
``அல்லாஹ்மீது ஆணையாக எதையெல்லாம் நபி (ஸல் ) அவர்கள் அவ்ர்களைத் தொட்டும் நாங்கள் உங்களுக்கு அறிவிக்கின்றோமோ அந்த ஒவ்வொரு விடயத்தையும் நேரடியாக நாம் நபிகளாரிடமிருந்து செவியுறவில்லை. என்றாலும் சிலர் சிலருக்கு நபி (ஸல் ) ஆவர்களைத் தொட்டும் அறிவிப்பவர்களாக இருந்தனர். (இன்னும் நபித் தோழர்களான நாங்கள் சிலர் சிலரை சந்தேகப் படுபவர்களாக இருக்கவில்லை"" . (ஆதாரம் - இமாம் ஹாகிமுக்குரிய முஸ்தத்ரக் )
இவ்வாறே பரா இப்னு ஆசிப் (ரழி) அறிவிக்கிறார்கள் ``எங்களில் ஒவ்வொருவரும் நபிகளாரிடமிருந்து ஒவ்வொன்றையும் கேட்கவில்லை ஏனென்றால் எங்களுக்கு குடும்பமும் வேலைகளும் இருந்தது. என்றாலும் அக்காலத்தில் நபித் தோழர்கள் பொய் சொல்பவர்களாக இருக்கவில்லை. அதனால் நபி (ஸல் ) அவர்களின் முன்னிலையில் ஒரு செய்தியைக் கேட்டால் அவர் அச்சபைக்கு வராதவருக்கு (அதை )எடுத்துத் செல்பவராக இருந்தார்கள்.""
(ஆதாரம் இமாம் அஹமதுக்குரிய முஸ்னத், இமாம் ரிபியாபிக்குரிய பவாயித், இமாம் ராம் ஹுர்மஸிக்குரிய முஹத்திதுல் பாஸில், இமாம் ஹாக்கிமுக்குரிய முஸ்தத்ரக் .
எனவே ஒரு நபித் தோழர் நபி (ஸல் ) அவர்களைப் பற்றி ஒரு செய்தியைக் கூறுகின்றபோது மற்றவர்கள் அதை நம்பி செயல்படுத்தும் நடைமுறைதான் சஹாபாக்கள் காலத்தில் இருந்தது. என்றாலும் உமர் (ரழி ) அவர்கள் மட்டும் இந்த விடயத்தில் நபி (ஸல் ) அவர்களைத் தொட்டும் விரும்பியவர் விரும்பியதை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக சற்றுக் கடினப் போக்குடன் அவருடைய ஆட்சிக் காலத்தில் நடந்துகொண்டார். இதை நாம் பின்வரும் சம்பவத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அபூ சயீத் அல் குத்ரீ கூறினார்கள்
``அன்சாரிகளில் ஓர் சபையில் நான் இருக்கின்ற வேளையில் அபூ மூஸா (ரழி ) அவர்கள் பயந்தவராக அங்கு வந்து கூறினார்
``உமர் (ரழி ) அவர்களிடம் நான் மூன்று விடுத்தம் அனுமதி கேட்டும் எனக்கு அனுமதி வழங்கப் படாததால் திரும்பிவிட்டேன். அதற்கு உமர் (ரழி ) அவர்கள் ``நீ வராமல் உம்மைத் தடுத்தது என்ன"" என்று கேட்டார்கள். அதற்கு நான் ``மூன்று விடுத்தம் அனுமதி கேட்டு எனக்கு அனுமதி வழங்கப்படாததால் நான் திரும்பிவிட்டேன்"" என்று அவரிடத்தில் கூறி அதற்குச் சான்றாக ரசூலுல்லாஹ் (ஸல் ) அவர்களின் பின்வரும் கூற்றையும் கூறினேன்"" எனக் கூறினார்.
``உங்களில் ஒருவர் மூன்று விடுத்தம் அனுமதி கேட்டு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றால் அவர் திரும்பிச் செல்லட்டும் " இதைக் கேட்ட உமர் (ரழி ) அவர்கள் ``அல்லாஹ்வின் மீது ஆணையாக இதற்கு ஓர் சாட்சியத்தை நீர் நிலை நிறுத்தவேண்டும்" என்று கூறினார்கள். எனவே ``உங்களில் இதனை ரசூல் (ஸல் ) அவர்களிடம் கேட்ட ஒருவர் இருக்கின்றாரா" என அபூ மூஸா (ரழி ) அவர்கள் கேட்டார்கள். ``அப்போது அக்கூட்டத்தில் மிகச் சிறியவராக உள்ளவரே தவிர உன்னுடன் வரமாட்டார்" என உபை இப்னு கஃப் (ரழி ) கூறினார்கள். அவர்களில் மிகச் சிறியவராக இருந்த நான் அவரிடம் சென்று நபி (ஸல் ) அவர்கள் இதைச் சொன்னதாக உமர் (ரழி) அவர்களுக்கு அறிவித்தேன். என அபூஸயீத் (ரழி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (ஆதாரம் புகாரி)
புகாரியின் மற்றொரு அறிவிப்பில் உமர் (ரழி ) அவர்கள் தனது வருத்தத்தை பின்வருமாறு தெரியப்படடுத்துகின்றார்கள் .
``நபி (ஸல்) அவர்களின் இவ்விடயம் எனக்குத் தெரியாமல் போய்விட்டதா"" ? ``வியாபாரங்களில் ஈடுபட்டது என்னை இதை தெரிந்துகொள்வதை விட்டும் திசைதிருப்பிவிட்டது"".
இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் உமர் (ரழி ) மட்டும் அவர் நபி (ஸல் ) அவர்களிடம் செவியுறாத விடயத்தை நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் சில சஹாபிகள் கூறினால் சொன்னவருக்குத் துணையாக மற்றொருவரின் சான்றை அதனை உறுதிப்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பவராக இருந்தார். இது அவரின் தனிப்பட்ட போங்காகும். என்றாலும் ஏனைய நபித்தோழர்கள் இவரைப் போன்று இந்தக் கடினப் போங்கைக் கடைப்பிடிக்கவில்லை. இவ்வாறான போங்கின் காரணமாக எந்த ஒரு நபித் தோழரும் நபிகளார் விடயத்தில் பொய் கூறியதாக இனங்கானப்படவுமில்லை.
தாபியீன்கள் காலம்
சஹாபாக்களை அடுத்து வந்த தாபியீன்கள் காலத்தில் முஸ்லிமாக இருந்துகொண்டு பொய் சொல்லும் வழக்கம் உள்ளவர்களும் முஸ்லிமாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட இஸ்லாத்தின் விரோதிகளும் உண்மை பேசும் விடயத்தில் பொடுபோக்காக நடப்பவர்களும் ஆங்காங்கே உருவாகத் தொடங்கினர். அதாவது தனது வார்த்தையில் எப்போதும் உண்மைத் தன்மையுள்ளவராக நடக்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட முஸ்லிம் சமுதாயத்துக்கு மத்தியில் வாய்மை தவறுபவர்க்ளும் நம்பிக்கைக்குத் துரோகம் செய்பவர்களும் மார்க்க நலனை விட சுய நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களும் தங்கள் சுய நலத்திற்காக நபிகளாரின் கண்ணியத்தை துஸ்பிரயோகம் செய்பவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகத் தொடங்கினர்.
இந்நிலை அன்றிருந்த சில அறிஞர்களால் உணரப்பட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் விடயத்தில் நம்பிக்கை குறைவான மக்களால் பொய்கள் சொல்லப்பட்டு விடுமோ என்று அச்சப்பாடும் இந்த அறிஞர்களிடம் அதிகரிக்கத் தொடங்கியது. உதாரணமாக ஒரு நபித் தோழரிடம் ஓர் செய்தியைக் கேட்ட பலர் அதை அறிவிக்கும் போது அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் முரண்பாடாக ஒரே செய்தியை அறிவிக்கின்ற நிலை காணப்பட்டதைக் கூறலாம்.
இதனால் வாய்மையில் உண்மைத் தன்மையில் களங்கம் உருவாகிய அச்சமுதாயத்தில் உண்மையாளர்களையும் நேர்மையாளர்களையும் இனங்கண்டால்தான் நபிகளாரைத் தொட்டும் சொல்லப்படுகின்ற செய்தியில் சரியான உண்மைத் தன்மையை அடையாளம் காணமுடியும். என்ற நிலை ஏற்பட்டது.
எனவே ஒருவர் நபி(ஸல்)அவர்களைத் தொட்டும் ஒரு செய்தியைச் சொன்னால் ஆய்வு செய்து அதை உறுதிப்படுத்துவதுடன் அவர் யாரிடமிருந்து அதை செவியுற்றாரோ அவரையும் இனங்கண்டு அவரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தியதன் பின்னர் அச்செய்தியை ஏற்றுக் கொள்ளும் வழக்கம் அச்சமுதாயத்தில் உருவாகத் தொடங்கியது.
இது தொடர்பாக இமாம் ராம்ஹுர்முஸி (ரஹ்) அவர்கள் அவருடைய ``அல் முஹத்திதுல் பாஸில்"" என்ற கிரந்தத்தில் குறிப்பிடுகின்றார். (ஹிஜ்ரி 104 ல் மரணித்த இமாம் சுஃபி (ரஹ் ) அவர்கள் முதலாவதாக அறிவிப்பாளர்களைப் பற்றி ஆய்வு செய்பவராக இருந்தார். இவரைப் போன்று (ஹிஜ்ரி 110 ல் மரணித்த இமாம முகம்மத் இப்னு ஸீரீன் (ரஹ் ) அவர்களும் தாபியீன்கள் காலத்தில் அறிவிப்பாளர்களை இனங்கண்டவர்களில் ஆரம்பமானவர் என்பதை ஹதீஸ் கலை மேதாவி இமாம் தஹபி (ரஹ் ) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இதே தொடரில் அவர்களின் பின்னணியில் (ஹிஜ்ரி 110 ல் மரணித்த ) இமாம் ஹசனுள் பஸரீ (ரஹ் ) அவர்கள், (ஹிஜ்ரி 95ல் மரணித்த இமாம் இப்ராஹீம் இப்னு அன்னஹயீ போன்ற இமாம்களும் தாபியீன்கள் காலத்திலேயே அறிவிப்பாலர்களைத் தெறித்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.
இவ்வாறே தாபியீன்கள் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த இமாம் அஃமஸ், இமாம் கஃபா, இமாம் மாலிக் (ரஹ் ) போன்றோர்களும் நபி (ஸல் ) அவர்களைப் பற்றிய ஒரு செய்தியை ஏற்றுக் கொள்வதற்காக அச்செய்தியை கூறக் கூடிய அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினர். அந்த அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையை இனங்கண்டு அவரைத் தரம் பிரிக்கும் ஓர் கலை தோன்றியது.
அவ் அறிவிப்பாளர் ஒவ்வொருவரின் நம்பகத் தன்மை பற்றியும் நபி மொழிகளை எழுதுவதைப் போன்று தனியான கிரந்தங்களில் எழுதிவைக்கத் தொடங்கினர். இக்கலையே ``அல் ஜரஹ் வத் தஃதீல் எனவும் அஸ்மா உர்ரிஜால் எனவும் அறிமுகமானது.
கிரந்தங்களும் இமாம்களும்
இத்தொடரில் அறிவிப்பாளர்களை இனம்கண்டு அவர்களைத் தரம்பிரித்து எழுதிய முக்கிய இமாம்களும் அவர்களின் கிரந்தங்கள் சிலதும் .
முன்வந்த இமாம்களும் கிரந்தந்களும்
01 - இமாம் இப்னு ஸஅத் - தபகாத்துல் குப்ரா
02 - இமாம் அஹமத் - அல் இலல் வர்ரிஜால்
03 - இமாம் புகாரி - அல் லுஅபாஉல் கபீர் வ ஸஈர், அத்தாரிஹுல் கபீர் வ ஸஈர்
04 - இமாம் ஜோஸ்தானி - அஹ்வாலுர் ரிஜால்
05 -இமாம் இஜ்லி - அத் திகாத்
06 -இமாம் நாஸாயி - அல் லுஅபா வல் மத்றூகீன்
07 -இமாம் அபூ ஹாத்தம் - அல் ஹஜர் வத் தஃதீல்
08 -இமாம் இப்னு அதீ - அல் காமில் பில் லுஅபாஉர் ரிஜால்
09 - இமாம் அல் கதீப் அல் பகவீ - தாரிஹுல் பஃதாத்
10 - இமாம் இப்னு அஸாகிர் - தாரிஹுத் திமஸ்க்
பின்வந்த இமாம்களும் கிரந்தங்களும்
இம்முன்னோர்களின் குறிப்புக்களை மையமாக வைத்து தாமும் ஆய்வு செய்து முன்னோர்களால் விடப்பட்ட குறைகளை நிரப்பும் முகமாகவும் முன்னோர்களின் பலதரப்பட்ட கருத்துக்களுக்கு மத்தியில் தமது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படுத்தும் முகமாகவும் இக்கலையில் பாரிய பங்களிப்புச் செய்த முக்கிய இரண்டு இமாம்கள் உள்ளனர்.
அவர்களின் கிரந்தங்கள் பின்வருமாறு
01. ஹிஜ்ரி 784 ல் மரணித்த இமாம் தஹபி
01. சியறுஅஃலாமின் நுபலா
02. மீஸானுள் இஃதிதால்
03. அல் முஃனீபில் லுஆபா
04. அல் காசிப்
02. ஹிஜ்ரி 852 ல் மரணித்த இமாம் இப்னு ஹஜர்
01. லிஸானுல் மீசான்
02. தஃதீபுத் தஃதீப்
03. தக்ரீபுத் தக்ரீப்
04. தஃஜீலுள் மன்பஆ
இன்ஷா அல்லாஹ் தொடரும்..)