தொழுகை இல்லாத கணவருடன் தொடர்ந்து வாழ இஸ்லாம் அனுமதிக்கிறதா?
"எனது கணவன் தொழுகை விடயத்தில் மிகவும் பொடுபோக்காக இருக்கின்றார். இடையிடையே தொழுது கொள்கிறார். வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் "ஜூம்ஆ"விற்கு போகிறார். நான் அவருக்கு பலமுறை அறிவுரை கூறி விட்டேன். இவ்வாறான கணவனோடு நான் குடும்ப வாழ்க்கை நடத்தலாமா? நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்" என ஒரு சகோதரி கேட்கிறார்.
தொழுகை என்பது இஸ்லாத்தின் ஒரு தூண் ஆகும். தொழாதவர்கள் இருவகையினர்.
முதலாவது-
”இஸ்லாத்தின் உச்சநிலையை அடைந்ததாகவும் இதனால் தொழுகை தேவையில்லை, உச்ச நிலையை அடையாதவர்களே தொழுவார்கள்” என்று சொல்பவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் "ஜமாஅத் அல்மூப்லிஹீன் "என அழைக்கப்படுவர். பயில்வான் கொள்கையை பின்பற்றுபவர்களை குறிப்பிடலாம். இவர்கள் இஸ்லாத்திற்கு வெளியே உள்ளவர்கள். இவர்களைப் போல் சில தரீக்கா வாதிகளும் "மஃரிபத் , ஹகீகத் உடைய நிலையை அடைந்தவர் தொழ வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறி தொழாமல் இருக்கின்றனர். இது போன்றவர்கள் இஸ்லாத்திற்கு வெளியில் உள்ளவர்கள். அதில் உலமாக்கள் ஏகோபித்த கருத்தில் இருக்கின்றனர்.
இரண்டாவது வகையினர்-
தொழ வேண்டும் என்று கூறி விட்டு தொழாமல் பொடுபோக்காக உள்ளவர்கள். இவர்களின் நிலையை பொருத்து தான் மனைவி அவருடன் வாழ்வதா? இல்லையா? என்று சொல்லலாம். பெரும்பாலான சவூதி உலமாக்கள் (உதாரணமாக :அஷ்ஷெய்க் பின் பாஸ்(றஹ்), இப்னு உதைமின்(றஹ்) போன்றோர் ) தொழாதவர்களை ஒரு வார்த்தையிலே காபிர்கள் என்று சொல்லிவிடுவார்கள். அதனடிப்படையில் இவர்களின் திருமணம் காதி நீதிமன்றம் சென்றுதான் பிரிய வேண்டியதில்லை. அவர் காபிர் என்பதால் திருமணம் தானாகவே பிரிந்துவிடும்.
உதாரணமாக மாற்று சகோதரர் ஒருவர் தான் முஸ்லிம் என்று பொய் சொல்லி முடித்த திருமணம்,
அல்லது தந்தையின் திருமணத்தில் பிறந்த பெண் பிள்ளையை தந்தை வழி சகோதரி என்று அறியாமல் திருமணம் முடித்தவர்களின் திருமணம் போன்ற சூழ்நிலைகளை குறிப்பிடலாம்.
இவை காதி நீதிமன்றத்திற்கு சென்று தான் பிரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில், அடிப்படையில் குறித்த விடயம் அறியப்பட்ட உடனேயே திருமணம் முறிந்து (பஸ்கு ஆகி)விடும்.
ஆக தொழாதவர் காபிர் என்று சொல்லும் உலமாக்களின் கருத்தின்படி இவர்களுடன் அந்த மனைவி சேர்ந்து வாழ முடியாது .
இதற்கு ஆதாரமாக நபி அவர்கள் கூறிய பின்வரும் ஹதீஸ்களை நாம் காணலாம் .
1- "(முஸ்லிமான ) எங்களுக்கும் காபிர்களுக்கும் இடையிலான ஒப்பந்தமே தொழுகையாகும். யார் அதைவிட்டு விடுகிறாரோ அவர் நிராகரித்து விட்டார்" (முஸ்னத் அஹ்மத்)
2- "ஒரு மனிதனுக்கும் இறை நிராகரிப்பிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தொழுகையை விட்டு விடுவதுதான்" (ஸஹீஹ் முஸ்லிம்)
உலமாக்களில் மற்றொரு சாரார்- அவர்களின் கருத்தின்படி தொழாதவர்கள் காபிரை போன்றவரின் செயலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் காபிர் ஆகவில்லை. இவர்களுடன் மனைவி சேர்ந்து வாழலாம். ஏனென்றால், மேற்படி இவ்வாறான ஹதீஸ்களில் வெளிப்படையான கருத்தை மட்டும் வைத்தே இவர்கள் காபிர்கள் என்று சொல்லுகிறார்கள் என்கின்றனர்.
எவ்வாறோ- மேற்சொன்ன ஹதீஸ்களின் படி தொழாதவர் அவர் காஃபிராகி விட்டார். அல்லது காபிரின் நிலையை அடைந்து விட்டார். அல்லது இஸ்லாத்தை விட்டு வெளியேறும் நிலையை நெருங்கி விட்டார். ஆக தொழாத ஒருவருடன் இருப்பதானது உங்களுக்கு தொழுகை, நோன்பு போன்ற அமல்களை செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தும் .
நபிகள் (ஸல்) சொன்னதைப்போல கணவனையோ அல்லது மனைவியையோ தேர்வு செய்யும் போது மார்க்க நிலவரத்தை கணக்கில் கொண்டு திருமணம் முடிக்க வேண்டும்.
ஆனால் எங்களுடைய சமூகத்தில் பட்டம், பணம், பதவி போன்றவற்றையே கருத்திற்கொண்டு நாங்கள் திருமணம் முடித்து வைக்கின்றோம். இது எங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஆகும்.
அத்தோடு நபியவர்களின் காலத்தில் உண்மையான காபிரை தவிர வேறு எவரும் தொழாமல் இருக்கவில்லை. கலிமா சொன்ன மறுகணம் அவர் தொழுவார்.
முஆத் (ரழி) அவர்களை நபியவர்கள் யமனுக்கு அனுப்பும்போது "அவர்களுக்கு தௌஹீதை எத்திவைத்து அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் ஐவேளை தொழுகையை அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்பதை அறியப்படுத்துங்கள்" என்று சொன்னார்கள்.
அதேபோல் அபூபக்கர்(றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் யார் ஒருவர் (இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான) ஸக்காதை கொடுக்க மாட்டேன் என்று சொல்வாரோ அவருடன் போர் செய்வேன் என்று போர்ப் பிரகடனம் செய்தார்கள். எனவே, இவ்வாறான செயலை செய்தவர்கள் குப்ருடைய நிலையை நெருங்கி விட்டார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.
அது அந்த பெண்ணிற்கு ஒரு இக்கட்டான நிலைமையாகும். ஏனென்றால் தொழுகை மட்டுமே ஒரு முஸ்லிமை வேறுபடுத்திக் காட்டக்கூடிய அடையாளம் ஆகும். தொப்பி அணிவதோ, தாடி வாளர்ப்பதோ, கத்னா செய்வதோ இஸ்லாமியருக்கு உரிய தனி அடையாளம் கிடையாது. இவற்றை முஸ்லிம் அல்லாதவர்களும் செய்கின்றனர்.
இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தொழாதவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். இது அவ்வாறான ஒரு பெரிய குற்றமாகும். ஆனால் இது எங்களுடைய சூழ்நிலையில் சாத்தியமில்லை.
ஆகவே இஸ்லாத்தின் முக்கிய அடையாளத்தை இழந்த இவ்வாறான கணவருடன் வாழ்வது பாவத்திற்கே வழிவகுக்கும். அவர் உங்களுடைய தொழுகை , ஸதகா, மார்க்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல் போன்ற விடயங்களுக்கு உதவி செய்ய மாட்டார். மார்க்க வழிகாட்டலை விட அவருடைய தேவைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டி ஏற்படும். அவர் பாவத்தின் பால் உங்களை வழிநடாத்துவார். இது திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும்.
தொழுகை இல்லாததை காபிருடைய அடையாளமாகவே நபியவர்கள் சொல்வதால் இவ்வாறான கணவருடன் மார்க்கத்திற்கு உட்பட்டு வாழ்வதே கடினமாகும்.
இதுவே இறுதியாக நம்மை சுவர்க்கம் நுழைவதை விட்டும் தடுக்கும் விதமாக அமைந்து விடும் .
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் என்றிருந்த அனைவரும் தொழுகையை கடைப்பிடித்தனர். முனாபிக்’கள் கூட தொழுகையை தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள். காரணம் தொழாவிடின் காபிர் என்று அடையாளப்படுத்தி விடுவார்கள் என்று பயந்தனர்.
நபியவர்களின் காலத்தில் தொழுகை இல்லாமல் ஒரு முஸ்லிமும் வாழ்ந்ததில்லை.
இதே போன்றுதான் நமது இளைஞர்களில் வேற்று மத சிந்தனை மற்றும் குர்ஆன், நபி(ஸல்) அவர்களின் நிலை சம்பந்தமான சந்தேகம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களை முஸ்லிம் என்று அடையாளப்படுத்துவது என்பதே கடினமாகும் .
இஸ்லாத்தில் கணவன் மனைவி உறவு என்பது அல்லாஹ் வின் சட்டத்தை அமுல்படுத்த கூடிய அமைப்பில் இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் இங்கு அல்லாஹ்வை அஞ்சி நடப்பதற்கான ஒரு நிலை இல்லாமல் இருக்கிறது. ஆகவே இவ்வாறான நிலையில் உள்ள தங்கள் கணவன்மார்களுக்கு நீங்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் உணரவில்லை என்றால் அல்லாஹ்வின் திருப்தியை தேடுகின்ற வழியை பாருங்கள்.
எங்களின் மறுமை வாழ்க்கை பாழாகி விடாமல் பார்த்துக் கொள்வோம். அல்லாஹ் இதன்மூலம் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு பயன் அளிப்பான். அல்லாஹ்வின் அன்பை பெறுகின்ற வழியை தேட நாம் அனைவரும் முயற்சிப்போம்.