முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்கள்
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை இனங்கானும் தொடரில் பின்வரும் ஹதீஸை நாம் ஆய்வுக்கு எடுக்கின்றோம்.
“திருமணம் செய்யுங்கள் தலாக் சொல்லாதீர்கள் ஏனென்றால் தலாக் நிகழ்வதற்காக அர்ஷ் நடுங்குகிறது.”
இந்த செய்தி நபிகளாரின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஓர் செய்தியாகும். இதனை இமாம் “கதீபுல் பஃதாதி” அவருடைய “தாரிகுல் பஃதாத்” என்ற கிரந்தத்திலும், இமாம் “அபு நுஜம்” “அக்பாரு இஸ்பகான்” என்ற கிரந்தத்திலும் பதிவுசெய்துள்ளார்கள்.
அறிவிப்பாளர் விமர்சனம்: இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் “அம்ரிப்னு ஜூமை” என்பவர் பொய் சொல்லக்கூடிய ஒருவர் என்று பல ஹதீஸ்கலை மேதாவிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். அவ்வாறே அவருடைய ஆசிரியராக இங்கு இடம்பெரும் “ஜூ வைபின்” என்ற மற்றுமொரு அறிவிப்பாளர் மிகவும் பலயீனமானவராக, நம்பகமற்ற ஒருவராக ஹதீஸ்கலை மேதாவிகளால் குறிப்பிடப்பட்டவர்.
எனவே இவ்வாறான பொய் கூறக் கூடிய அல்லது நம்புவதற்கு தகுதியற்றவர்களால் இட்டுக்கட்டப்பட்ட இந்த செய்தி முஸ்லிம் சமூதாயத்தில் நபிகளாருடைய வாக்காக பேசப்படுவது மிகவும் பெரும் குற்றமாகும்.
விபரீதங்கள்:
1) நபி(ஸல்) அவர்கள் கூறாத செய்தியை, அதாவது அவர் மீது பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறும் போது அன்னாரின் பின்வரும் எச்சரிக்கைக்கு ஆளாக வேண்டி ஏற்படும்.
“என் மீது பொய் கூறாதீர்கள், ஏனென்றால் என் மீது யார் பொய் கூறுவானோ அவன் நரகம் நுழையட்டும்” (ஆதாரம்: புஹாரி)
தேவையேற்படும் போது மனைவியை விவாகரத்து செய்வது ஒரு ஆணுக்கு அனுமதியானதாகும் இன்னும் சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்படாத மனைவியை விவகாரத்துச் செய்வது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதாகவும் இருக்கின்றது என்பதற்கு பல ஆதாரமான சான்றுகள் உள்ளன. அந்த ஆதாரமான செய்திகளுக்கு முற்றிலும் முறணூனதாக மேற்கூறப்பட்ட பொய்யான ஹதீஸ் அமைகின்றது.
“நபி இப்றாஹிம்(அலை) அவர்களின் கட்டளைக்கு அமைய அவரின் மகன் இஸ்மாயில்(அலை) அவரின் மனைவியை விவாகரத்துச் செய்தார்” (ஆதாரம்: புஹாரி)
நபி(ஸல்) அவர்கள் தனது மனைவி “ஹப்ஸா(ரழி) யை ஒரு விடுத்தம் விவகாரத்துச் செய்தார். பின்னர் (இத்தா காலத்தில்) மீட்டியெடுத்தார் (ஆதாரம்: அபூதாவூத்)
இவ்வாறே “அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் தனது மனைவியை (முறைதவறி) விவாகரத்துச் செய்தார்கள். நபிகளாரிடம் இதைத் தெரிவித்த போது சரியான முறையில் விவாகரத்துச் செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்து அவர் விரும்பினால் விவாகரத்துச் செய்வதற்கான அனுமதியை அளிக்கின்றார். (இதன் விவரத்தை சஹீஹ_ல் புஹாரியில் காண்க)
இது போன்ற இன்னும் பல ஆதாரமான சம்பவங்களை தலாக் சொல்வதற்கு அனுமதி இருக்கின்றது, என்பதைப் புரிந்துகொள்ள ஹதீஸ் நூல்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
என்றாலும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழக் கூடிய தம்பதியினருக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதில் ஷைத்தான் மிகவும் சந்தோஷமடைகிறான் எனும் செய்தியை ஆதாரமான ஹதீத்களில் காண்கின்றோம்.
நபி(ஸல்) கூறியதாக ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார்கள்:- நிச்சயமாக இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரின் மீது வைக்கிறான். பின் தன் படையினரை அனுப்பிவைக்கிறான். அவர்களிலே அவனிடத்தில் மிக நெருக்கமான அந்தஸ்துக் குரியவர் அவர்களில் மிகவும் பிரமாண்டமாக குழப்பம் செய்பவன் அவரகளில் ஒருவன் இவ்வாறு செய்தேன் என்று வந்து கூறுவான்.
(நீ ஒன்றும் செய்யவில்லை என்று இப்லீஸ் கூறிவிடுவான்) மற்றுமொருவன் (இன்னாருக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் பிரிந்து விடும் வரை விட்டு விடவில்லை என்று கூறுவான்) அவனை இப்லீஸ் தன்னிடத்தில் நெருக்கமாக வைத்துக் கொண்டு கூறுவான் நீ மிகவும் நல்லவன். (ஆதாரம்: முஸ்லிம்)
கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதும் ஒற்றுமையாக இருக்கும் சமுகங்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதும் ஷைத்தானுக்கு மிக விருப்பமான காரியமாகவிருக்கிறது என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. எனவே முடியுமானவரை அல்லாஹ்வின் வரம்புகளை மீறாத நிலையில் விவாகரத்து ஏற்படாத வண்ணம் ஒற்றுமையாக வாழ்வதற்கே முயற்சிக்க வேண்டும்.
என்றாலும் ஒருவரின் மனைவி அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்பட்டவளாக வாழ்வதற்கு உடன்படாமல் ஷைத்தானைத் திருப்திப்படுத்தும் வாழ்வையே தேர்ந்தெடுப்பவளாக இருந்தால், அவளைத் திருத்துவதற்கு பல முயற்சி செய்தும் பிரயோசனம் ஏற்படவில்லையென்றால் அப்பெண்ணை விவாகரத்துச் செய்து விட்டு அல்லாஹ்வுக்குப் பொருத்தமான வாழ்க்கையாக வாழத் தயாராகவுள்ள பெண்ணுடன் வாழ்க்கையைத் தொடர்வதையே அல்லாஹ் விரும்புகின்றான்.
பிழையான வழிகளில் தன்மனோ ஆசைகளைத் தீர்த்துக் கொண்டு பாவியாகாமல் இருப்பதற்கே இத்திருமண முறையை அல்லாஹ் அனுமதித்து, தங்கள் ஆசையையும் அல்லாஹ்வின் தீர்ப்புக்கு அமைவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்படுத்தியுள்ளான்.
எனவே அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்பட்ட அடியானாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் திருமணம் செய்த ஒருவனின் குடும்ப வாழ்க்கையில், பல அல்லாஹ்வின் சட்டங்கள் மீறப்படுவதற்கு அக்குடும்ப வாழ்க்கை காரணமாக அமையலாம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அத்தம்பதியினர் பிரிந்து விடுவதே அல்லாஹ்வின் சட்டத்தைப் பாதுகாக்கும் என்கின்ற நிலை இருக்கும்போது அவ்விருவரும் பிரிந்து விடுவதே பொருத்தமாக அமையும்.
அல்லாஹ்வின் வரம்புகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு கணவன் மனைவியை தலாக் சொல்லிவிடுவது ஷைத்தானுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்கு மாற்றமாக வெறுப்பையே ஏற்படுத்தும். இதே வேளை சிறுசிறு பிரச்சினைகளைக் காரணம் காட்டி எடுத்ததற்கெல்லாம் தலாக் என்று போகும் போது அது ஷைத்தானை சந்தோஷப்படுத்துவதாக அமையும்.
இது தொடர்பாக மற்றுமொரு பலஹீனமான ஹதீதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. “அல்லாஹ்விடத்தில் ஹலாலான விடயத்தில் மிகவெறுப்பானது தலாக் ஆகும்” (ஆதாரம்: அபூதாவுத்)
இந்த செய்தியும் நபி மொழியாக மக்கள் மத்தியில் பிரபல்யமானதென்றாகும். இந்த ஹதீதும் பலஹீனமான ஹதீதாகும். இந்த ஹதீதை சிலர் ஆதாரமெனக் கூறினாலும் இச்செய்தி வரும் அறிவிப்பாளர் வரிசைகளை ஆய்வு செய்யும் போது (ழயீப்) பலஹீனமான ஹதிஸ்களின் வகையில் ஒன்றான “முர்ஸலான ஹதீஸ்” என்ற வகையைச் சார்ந்ததாகவே முடிவெடுக்க வேண்டியுள்ளது.
ஒரு தாபியின் நபியைச் சந்திக்காமல் சஹாபியைச் சந்தித்தவர் நபியைத் தொட்டும் நேரடியாக அறிவிக்கும் செய்திகளுக்கு “முர்ஸல்” என்று கூறப்படும் இந்த ஹதீதும் சரியான கூற்றின் படி இந்த வகையைச் சேர்ந்ததாகவே கருதப்படுகிறது.
சில அறிவிப்புகளில் அபூதாவுத் கிரந்தத்தில் இடம்பெற்றதைப் போன்று இப்னு உமர்(ரழி) அவர்கள் நபிகளாரைத் தொட்டும் கூறுவதாக வந்திருந்தாலும் மிகச் சரியான அறிவிப்பு குறிக்கப்பட்ட சஹாபி விடுபட்டுவரும் அறிவிப்புகளாகும்.
இது தொடர்பான விபரங்களை மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாகக் காணலாம்.
மேலும் இதனுடைய கருத்தை நாம் நோக்கும் போது நாம் முன்னர் எடுத்து வைத்த அல்லாஹ்வின் அங்கீகாரம் உள்ள விவாகரத்துகளுக்கு முரண்படுகின்றது. என்றாலும் ஷைத்தான் விரும்பக்கூடிய விதத்தில் விவாகரத்து நிகழும் பட்சத்தில் அதற்கு நேர்பட்டுப் போகின்றது என்பதை கவனத்தில் கொள்க.
குறிப்பு:- எவ்வாறாயினும் எந்நிலையிலும் அல்லாஹ்வின் பெயரிலோ, அவனது தூதரின் பெயரிலோ ஓர் விடயம் மக்களால் பேசப்படும் போது அது ஆதாரமானதா என்று இனங்காணாமல் நாம் பேசுவதும், அவற்றை ஆதாரமாகக் கொள்வதும், நாம் நரகத்திற்குச் செல்வதற்கு காரணமாக அமைந்துவிடும் என்பதை நினைவில் கொள்வோம்.
ஆக்கம்: அன்ஸார் தப்லீகி