2021-02-23 612

எனது மனைவிக்கு சொந்தமான காணியில் எனது பணத்தை செலவளித்து எனக்குரிய வீட்டை கட்டி அதில் நான் குடியிருக்கலாமா?

எனது மனைவிக்கு சொந்தமான காணியில் எனது பணத்தை செலவளித்து எனக்குரிய வீட்டை கட்டி அதில் நான் குடியிருக்கலாமா?

இந்தக் கேள்வியில் கூறப்பட்ட விடயம் எமது சமூகவழக்கில் சாதாரணமாக நடைபெறக் கூடிய விடயம். இவ்வழக்கு எம்சமூகத்தில் இருப்பதற்கு காரணம் கணவன், மனைவி தமக்கிடையே இருக்கும் சொத்துக்களை அல்லாஹ்வின் சட்டப்படிபிரித்துக் கொள்வதில்லை.

மாறாக மனைவியின் சொத்தை கணவன் தன்னுடைய சொத்தைப் போன்று உரிமை கொண்டாடுகின்ற ஓர் வழக்கு எமது முஸ்லிம் சமுதாயத்தில் வேர்பிடித்திருப்பதே இதற்குக் காரணம். அதனால் அவர்களுக்கிடையில் வாழ்க்கைப் பிரச்சினை ஒன்று ஏற்படாத வரை அதனை வேறுபடுத்திப் பார்க்காமல் ஒன்றாகப் பார்க்கின்றனர். வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு அவர்களுக்கிடையில் பிரிவினை என்கின்ற ஒரு நிலை ஏற்படும்போது இருவரின் சொத்தையும் வெவ்வேறாக வேறு படுத்தி மதிப்பிட வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகின்றது.

வாரிசுரிமைச் சட்டத்தைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் 04ம் அத்தியாயம் 11,12 ம் வசனங்களில் குறிப்பிடும் போது கணவன் சொத்தென்றும், மனைவி சொத்தென்றும் வேறுபடுத்திப் பேசுகின்றான். மனைவியின் அல்லது கணவனின் மரணத்தின் பின்பு சொத்தைப் பிரிக்கும் போது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ இவ்வளவுதான் அவர்களின் சொத்துக்களில் இருந்து உரிமை இருக்கிறது என்கின்ற விடயம் தெளிவாக சொல்லப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.

எனவே, அந்த அல்லாஹ்வின் சட்டப் பிரகாரம் செத்து பிரிக்கப்படுவதாயின் அவர்கள் உயிரோடு வாழ்கின்ற போதும் அவர்களின் சொத்து தனித்தனியே வேறாக்கப்பட்டு இது மனைவியின் சொத்து, இது கணவனின் சொத்து என்று இனங்காணப்பட்டிருக்க வேண்டும்.

அப்போதுதான் ஒருமனைவி இறந்தபின் அவளுடைய சொத்தில் ¼பகுதியை கணவனுக்கு கொடுப்பதற்கும், அவளின் தாய், தந்தை இருந்தால் ஒவ்வொருவருக்கும் தலா 1ஃ6பங்கை கொடுப்பதற்கும், மிகுதியை பிள்ளைகளுக்கு ஆண்பிள்ளைக்கு 2 பங்கு, பெண் பிள்ளைக்கு 1 பங்கு என்ற அடிப்படையில் பிரித்துக் கொடுக்க வாய்ப்பிரிக்கின்றது.

இவ்வாறே கணவன் இறந்து விடுகின்ற போது அவனுடைய சொத்தில் 1ஃ8மனைவிக்கும், தாய் தந்தைக்கும் தலா1ஃ6 பங்கையும் கொடுத்து விட்டு மிகுதியை தம் பிள்ளைகளுக்கு ஆண்பிள்ளைக்கு 2, பெண்ணுக்கு 1 பங்கும் என்ற அடிப்படையில் கொடுக்க வாய்ப்பிருக்கின்றது.

ஆனால் இந்தச் சட்டங்களையும், இன்னும் பல அல்லாஹ்வின் சட்டங்களையும் நடை முறைப்படுத்துவதற்கு முடியாத நிலை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் மனைவியின் காணியில் கணவன் தன் சொத்தை செலவளித்து வீடு கட்டுகின்ற போது உருவாகுவதை நாம் காணலாம். மனைவியின் காணியில் கணவனின் சொத்து மூலம் வீடு கட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏற்படுகின்ற சில பிரச்சினைகளை தற்போதுபார்ப்போம். கணவன் இறந்து விடுகிறான் இங்கு காணி மனைவிக்குரியதாகவும் வீடு கணவனுக்குரியதாகவும் இருப்பதால் வீட்டுக்கு மட்டும் தனியே பெறுமதியிட்டு அதிலிருந்து 1ஃ8 பங்கை மனைவிக்கு உரிமையாக்க வேண்டும். பெற்றோருக்கு (தாய், தந்தைக்கும்) அவ்வீட்டிலிருந்து 1ஃ6 பகுதி உரிமையாக வேண்டும். வீட்டின் மிகுதிப் பகுதி பிள்ளைகளுக்கு 2-1 என்று பிரிக்கப்பட வேண்டும். ஆனால் இருந்த வீடோ மனைவியின் காணியின் மீதே தங்கியுள்ளது. காணி மனைவிற்குரியதால், காணி அல்லாமல் வீட்டைமட்டும் வேறாக்கி எப்படி பிரித்துக் கொள்வது? இங்கு மனைவியுடைய காணியில் கணவனின் பெற்றோருக்கு எந்த உரிமையும் கிடையாது.

பிள்ளைகளுக்கு மனைவி உயிரோடிருக்கும் போது இறந்துவிட்ட கணவனின் சொத்தில் பங்கு வருவதைப் போன்று ½ என்ற பங்கு வரமாட்டாது. இதுமிகவும் சிக்கலான பிரச்சினையாக இருப்பதை நீங்கள் காணலாம். அல்லது மனைவி இறந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம் கணவனின் வீடு உள்ள அந்தக் காணித்துண்டு மனைவிக்கு உரியதாகவுள்ளதால் இப்போது அந்தக் காணியின் 1ஃ6இ 1ஃ6 அளவில் தாய்க்கும், தந்தைக்கும் உரித்தானதாக மாறிவிடுகின்றது. அதை அவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் ஆனால் அதன் மேல் கணவனின் வீடுஉள்ளதால் சிக்கலாகமாறிவிடும்.

காணியை மட்டும் பிரிக்க முடியாதுள்ளது. பிரிப்பதென்றால் வீட்டை அநியாயமாக அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டும். அல்லது அப்பகுதியின் மேலுள்ள வீட்டுப் பகுதியை மருமகனிடம் அவளின் பெற்றோர் வாங்க வேண்டும். ஆனால் அவர்களிடமோ வசதியில்லை. இவ்வாறே அந்தக் கணவனுக்கு அந்தக் காணியிலிருந்து ¼ பங்குதான் உரிமையாகின்றது. மிகுதி பிள்ளைகளுக்கு சேர வேண்டும். .

அப்பிள்ளைகளோ அக்காணியில் அவர்களுக்குரிய பங்கை விற்க விரும்புகிறார்கள்; ஆனால் அதன் மேல் தகப்பனுக்குரிய வீடு உள்ளது. அவருக்கு வீடு தேவை பிள்ளைகளுக்கு பணம் தேவை. வீடு தேவைப்பட்ட தகப்பனுக்கு நிலத்துண்டுக்குரிய பணத்தைக் கொடுப்பதற்கு பணமும் இல்லை அவ்வீட்டைபிள்ளைகளுக்கு நன்கொடையாக கொடுப்பதற்கு விருப்பமும் இல்லை.

ஆனால் அல்லாஹ்வின் சட்டப்படி அந்தநிலம் வாரிசுரிமைச் சட்டத்திற்கிணங்க பிரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சம்மந்தப்பட்டவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகவேண்டும். இவ்வாறு வாரிசுரிமைச் சட்டத்தை நடை முறைப்படுத்து கின்ற போது பல சிக்கல்கள் பல கோணங்களில் குடும்ப அங்கத்தவர்களின் நிலையைப் பொறுத்து ஏற்பட வாய்புள்ளது. ஒருவர் வீடு கட்டவிரும்புகிறார்.

மனைவியிடம் காணியுள்ளது. அதுவும் அல்லாஹ்வின் சட்டப்படி உண்மையில் அவளுக்குரிய காணி என வைத்துக் கொள்வோம் அவர் மனைவியின் காணியை கிரயமாக வாங்கியதன் பெயரில் அதை எழுதிவிட்டால் அது அவருக்குரியதாகும். ஆனால் அக்காணிக்கு நியாயமான விலையை அக்காணி உள்ள பகுதியில் என்ன விலை மற்றவர்களால் பேசப்படுகின்றதோ அதே விலையைக் கொடுத்து தனக்கு அதனை சட்டப்படி உரிமையாக்கி அதன் பின் அதில் அவர் வீடு கட்டலாம்.

அதன் பின்னரும் அவர்களுக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டால் அல்லது அவர் இறந்துவிட்டால் அது தொடர்பான சட்டங்களை நடை முறைப்படுத்துவது இங்கு சிக்கலாகாது. ஆனால் இன்று கணவனுக்கு அதை விற்பதற்கு மனைவிமார்கள் தயார் இல்லை சட்டப்படி அதைவாங்கி தன் பெயரில் உறுதியை எழுத கணவன்மார்களும் தயார் இல்லை. வேற்றாரின் காணியாக இருந்தால் அதைவாங்கும் போதுவிலையைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் இங்குவிற்பவர் மனைவியாக இருக்கின்ற போது தர்மசங்கட நிலை கேட்கின்றவர்களுக்கும் ஏற்படுகின்றது.

கணவன் கேட்கின்ற போது அதன் உரிமையாளரான மனைவிக்கு விலை குறைப்பதிலும் தர்மசங்கட நிலை ஏற்படுகின்றது. வேற்றாருக்கு விற்பதெனின் அதிக விலைக்கு விற்கலாம் ஆனால் இங்கு கேட்பது கணவன் குறைக்காவிட்டால் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமானநிலை. இதற்குதீர்வுஎன்ன? அதனை விட்டுவிட்டால் எத்தனையோ காணிகள் உண்டு அவைகளில் ஒன்றை வாங்கி நமது சொத்தில் நமது வீட்டைக் கட்டலாம். அதில் நமது மனைவியை குடியிருப்பாட்டலாம்.

அவளின் காணி அவளுக்குரிய சொத்தாக இருந்து கொண்டே இருக்கும். இந்தவிடயம் அல்குர்ஆனில் “சூறாஅந்நிஸா” 3ம் வசனத்தின் மூலம் வழிகாட்டப்படும் மற்றுமொரு சட்டத்திற்கு ஒப்பாக உள்ளது. (தங்களின் பராமரிப்பின் கீழுள்ள அநாதைப் பெண் பிள்ளைகளை திருமணம் செய்கின்ற வேளை அவர்களின் மஹர்த் தொகையை தீர்மானிக்கின்ற விடயத்தில் அல்லது தன் பராமரிப்பின் கீழுள்ள அவர்களின் சொத்துக்கள் விடயத்தில்) நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாமல் இருந்துவிடுவோமோ என்ற அச்சப்பாடு ஏற்பட்டால் (அந்த அநாதை பிள்ளைகளை விட்டுவிட்டு உங்கள் மனதிற்குப் பிடிப்பான வேறு) பெண்களிலிருந்து இரண்டையோ, மூன்றையோ அல்லது நான்கையோ முடியுங்கள்.

சிலர் தன் கணவனுக்கு தன் காணியை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டேன் என்று கூறலாம். அன்பளிப்பாக வழங்கிவிட்டால் அதன் உரிமை அன்பளிப்பை பெற்றவருக்கு முழுமையாக மாறிவிடுகின்றது. அன்பளிப்பு வழங்கியவருக்கு அதற்குப் பின் எந்த உரிமையும் கிடையாது இவ்வாறு அன்பளிப்பாக கொடுத்து விட்டோம் என்று கூறுபவர்களிடம் அப்பாடியாயின் அதனை சட்ட ரீதியாக எழுதிக் கொடுத்துவிடுங்கள் என்றால் மறுக்கின்றார்கள்.

அதுமட்டுமின்றி தங்களுக்கிடையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு விட்டால் “வெளியே போங்கள்” என்று விரட்டுகின்றார்கள். இதனால் அவர்களின் வாதம் பொய்யானதாகும். ஒரு கணவனுக்கும் மனைவிக்கு மிடையில் பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம் அப்பிரச்சினை விவாகரத்தாக ஆகிவிடக்கூடாது என்பது எல்லோரினதும் எதிர்பார்ப்பு. தற்செயலாக விவாகரத்து ஒன்று நிகழ்ந்தாலும் அது மூன்றாம் தலாக்காக மாறிவிடக் கூடாது என்பதும் அல்லாஹ்வினதும் அவனின் அடியார்களினதும் விருப்பமாகும்.

அதனால் தான் பகலில் பிரச்சினை ஏற்பட்டாலும் இரவில் அந்த மனைவியை அரவனைத்து பிரச்சினையை மறக்கின்ற வழியை அல்லாஹ் காட்டித்தருகின்றான். இது கணவன் மனைவியை தன் வீட்டில் குடியமர்த்தும் போதுதான் மிகவும் சாத்தியமாகும். ஏனெனில் என்ன பிரச்சினை வந்தாலும் அம் மனைவி தன் கணவனை “என்னை விட்டும் போங்கள்” என்றோ வீட்டைவிட்டு வெளியேறுங்கள் என்றோ கூறி அசிங்கப்படுத்த முடியாது.

ஆனால் கணவன் மனைவியின் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அல்லது மனைவிக்கு சொந்தமான காணியில் அவன் வீடுகட்டியிருக்கும் பட்சத்தில் அந்த சொத்தில் அவளுக்கு உரிமை இருப்பதால் அவனின் வாய் திடீரென முந்துகிறது சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் சிலர் தம் வார்த்தையில் முந்திவிடுகின்றனர்.

என்ன கூறுகிறாள்?

விருப்பமில்லையென்றால் விட்டு விட்டு போறதுதானே அல்லது அதை விடக் காரமான வார்த்தைகளையும் மற்றும் கணவனை விரட்டுகின்ற வார்த்தைகளையும் பெண்கள் தங்கள் வாய்களினால் அள்ளிக் கொட்டுவதை நாளாந்தம் பார்க்கின்றோம். மனைவியை அவன் தலாக் சொல்லிவிட்டால் அவனது சொத்தில் அவன் குடியிருக்கின்ற இடத்தில் அவளை இத்தாவுடைய காலத்தில் இருப்பாட்ட வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

உங்களுடைய வசதிக்குத் தகுந்தவாறு நீங்கள் குடியிருந்துவரும் இடத்தில் (இத்தாவிலிருக்கும் பெண்களாகிய) அவர்களை குடியிருக்கச் செய்யுங்கள். (சூறா: அத்தலாக் 06) அப்போதுதான் அவ்வ்pருவருக்கிடையில் கோபங்கள், பிரச்சினைகள் மறந்து மீண்டும் ஓர் புதிய வாழ்க்கை தொடர வாய்ப்பிருக்கிறது. அவளின் குறைகளும் வெளியில் தெரியாமல் இருப்பதற்கும், அவளின் குறைபாடுகள் அம்பலமாகாமல் இருப்பதற்கும் வழியாகவும் இருக்கின்றது.

அவனின் இடத்தில் இருந்து கொண்டு அவன்தரும் ஆகாரத்தைப் புசித்துக் கொண்டு அவனுக்குச் சொந்தமான வீட்டில் வெளியேறாமல் கட்டுப்பாட்டுடன் இத்தா அனுஸ்டிக்கும் அந்த மனைவி அக் கால கட்டத்தில் தன் கணவனால் தனக்கு ஏற்பட்ட குறைகளை எல்லாம் மறந்து விட்டு அவனுடனே தொடர்ந்தும் சேர்ந்து வாழ ஏங்குகின்ற சந்தர்ப்பம் அவனின் மனதில் ஏற்படலாம்.

இவ்வாறே தனது பராமரிப்பின் கீழ் தன் வீட்டில் தனது செலவில் இத்தா இருக்கக்கூடிய அந்தப் பெண்ணின் குறைகள் எல்லாம் அவளின் நலவுகளை எண்ணிப்பார்க்கின்ற போது மறந்து போக அதிகமதிகம் வாய்ப்புண்டு. எனவே அந்த இத்தாவுடைய 2,3 மாத காலத்தில் குறைகள் எல்லாம் மறந்துபோன அந்தப் பெண்ணுடனேயே மீண்டும் சேர்ந்து கொள்வதற்கும் அங்கே சந்தர்ப்பங்கள் நிறைந்து கிடக்கின்றது.

இதற்கு மாற்றமாக மனைவிக்குச் சொந்தமான காணியில் அவன் இருக்கும் பட்சத்தில் அவளை தலாக் சொன்ன பின்னர் அவனால் அங்கு இருக்க முடியாத நிலை ஏற்படுவதனால் அடுத்த கணத்திலேயே பெட்டி படுக்கையோடு அவன் வெளியேறுகிறான். அல்லாஹ்வின் கடடளைக்கு மாற்றமான முறையில் அவளுடைய இத்தாவுடைய காலம் கழிகின்றது. முனைவியை விட்டுக் கணவணும், கணவனை விட்டு மனைவியும் வெவ்வேறான இரண்டு தூரமான இடங்களில் ஆகிவிடுவதால் அவ்விருவருடனும் மனித iஷத்தான்கள் சேர்ந்து விடுகின்றார்கள்.

அந்த மனித iஷத்தான்கள் கணவனை குறைவுபடுத்தி மனைவி இடத்திலும் மனைவியை குறைவுபடுத்திக் கணவனிடத்திலும் கூறத் தொடங்கி விடுகின்றனர். அதனால் குறைகளும், குற்றங்களும் மறந்து மறந்து போவதற்குப் பதிலாக மனதிலே நிலையாகக் குடியிருத்தப்படுகின்றது.

இறுதியாக ஒன்று சேர வேண்டிய இரண்டு உள்ளங்கள் அநியாயமாகப் பிரிக்கப்பட்டு இரண்டு பேரும் பிரிவைத் தேர்ந்தெடுக்கின்றனர். இறுதியாக இவ்விருவருக்கிடையில் தத்தளிக்கும் அவர்களின் பிள்ளையின் நிலையோ அதோ பரிதாபம்! நான் சொல்லத் தேவையில்லை. எனவே பிரச்சினைகளுக்குள்ள மனித வாழ்க்கையில் மிக இலகுவாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கின்ற விதத்தில் அல்லாஹ_த்தஆலா சட்டங்களையும் வரம்புகளையும் ஏற்பளுடுத்தித் தந்துள்ளான்.

அச்சட்டங்களையும் வரம்புகளையும் மீறுகின்ற விதத்தில் எம் வாழ்க்கையின் வசதிகளை ஏற்படுத்திவிடக் கூடாது. சிலவேளை அது உலக வாழ்க்கைக்கு சந்தோஷமாக இருந்தாலும் மறுமையின் நிரந்தர வாழ்க்கையில் நஷ்டத்திற்கும், தண்டனைக்கும் காரணமாக ஆகிவிடும். எனவே அல்லாஹ்வை பயந்து கொள்வோம். அவனின் சட்டத்திற்கேற்ப எங்களை மாற்றுவோம்.

சமூகத்தில் பரவியுள்ள பிழையான கலாச்சாரங்களை ஒழிப்போம் எம் கண் முன்னே இஸ்லாமிய மறுமலர்ச்சியினை இன்ஷா அல்லாஹ் ஏற்படுத்துவோம். மறுமை நாளில் அல்லாஹ்வின் அருளால் வெற்றி பெற்றவர்களாக நிரந்தர சுவனத்தில் நுழைவோம்.

                                                                                                               கட்டுரை

                                                                                                       அன்ஸார் தப்லீகி