2022-05-19 698

வுழுவுடன் இருக்கின்றேனா என சந்தேகம் வந்தால்?

அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அல்லாஹ்வால் ம‌னித சமுதாயத்திற்கு கடமையாக்கப்பட்ட தொழுகையை நிறைவேற்ற அம்மனிதன் வுழுவுடன் இருப்பது அவசியமானதாகும். அந்த அடிப்படையில் அனைவருக்கும் அடிக்கடி எழக்கூடிய சந்தேகம் தான் ஒருவர் தொழுகைக்காக நிற்கும் நேரத்தில் தான் வுழுவுடன் இருக்கின்றேனா? என மனதில் தோன்றுவதாகும் 

ஒருவர் தொழுகைக்காக வருவதற்கு முன் வுழுவுடைய நிலையில் இருந்திருப்பார். பின்னர் வுழுவுடன் இருக்கின்றேனா? அல்லது வுழுவை முறிக்கும் காரியங்கள் ஏதாவது நிகழ்ந்தனவா? என்ற சந்தேகம் எழுகிறது.

இந்நிலையில் எவ்வாறு நாம் முடிவெடுப்பது? என்பதனையே நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.

அதாவது இச்சந்தேகம் எமக்கு எழும் வேளையில் நாம் இரண்டு விடயங்களை கவனிக்க வேண்டி உள்ளது. அதில் ஒன்று தான் இச்சந்தேகம் ஏற்படும் முன் நான் எந்த நிலையில் இருந்தேன் என்பதாகும்.

இச்சந்தேகம் எழும் முன் தான் வுழுவுடன் இருந்தது உறுதியாக இருந்து அதற்கு பின்னர் வுழுவை முறிக்கும் காரியங்கள் எதுவும் நிகழ்ந்ததாக உறுதிப்பாடும் இல்லை என்றால் அவர் வுழுவுடன் இருக்கின்றார் என்பது உறுதியாகும்.

இரண்டாவது விடயம் இச்சந்தேகத்திற்கு முன் தனக்கு வுழுவை முறிக்கும் காரியங்களில் ஒன்று நிகழ்ந்தது உறுதியாக இருந்து (உதாரணமாக வெளிப்படையாக காற்றுப் பிரிதல், இயற்கை கடன்களை நிறைவேற்றல் போன்றவை) அதற்கு பின்னர் தான் வுழு செய்தமை உறுதியாக இல்லாமல் சந்தேகத்திற்கிடமாக இருந்தால் அவரது வுழு முறிந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படும்.

ஏனெனில் அவருக்கு வுழு முறிந்த விடயம் உறுதியாகவும் பின்னர் வுழு செய்தாரா? என்பது சந்தேகத்திற்குரியதாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் உறுதியான விடயம் எடுக்கப்பட்டு சந்தேகமான விடயம் விடப்படும்.

இதற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை விடயத்தில் வழிகாட்டியுள்ள வழிமுறை ஆதாரமாகவும் உறுதியாகவும் அமைகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ‌ர்க‌ள் கூறினார்கள் :

உங்களில் ஒருவருக்கு நாம் மூன்று ரக்ஆத்கள் தொழுதோமா?  அல்லது நான்கு ரக்ஆத்கள் தொழுதோமா என்று தொழுகையி‌ல் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்ஆ‌‌த்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்ஆதை) தொழுதுவிட்டு சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும். அவர் (உண்மையில்) ஐந்து ரக்ஆ‌‌த்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காக செய்த அவ்விரு சஜதாக்களால்) அவரது தொழுகையை அந்த ஐந்து ரக்அத்கள் இரட்டைப்படை ஆக்கிவிடும். அவர் நான்கு ரக்ஆத்கள் பூர்த்தி செய்து விட்டிருந்தால் அவ்விரு சஜதாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும். (முஸ்லிம் :990)

எனவே இந்த ஹதீஸின் பிரகாரம் எமக்கு எந்த விடயத்தில் உறுதிப்பாடு இருக்கின்றதோ அதனை எடுத்து சந்தேகமானதை தவிர்த்து நடக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

இதனடிப்படையில் வுழுவில் எமக்கு ஏற்படும் சந்தேகங்களில் நமது சந்தேகத்திற்கு முன் உள்ள நிலையை கருத்திற் கொண்டு நாம் வுழுவுடன் இருக்கிறோமா இல்லையா என்பதனை தீர்மானித்துக் கொள்வோம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்க விடயங்களில் தெளிவை தருவானாக!!

 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி)

அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம் : உம்மு Bபஹிய்யா ஷரயிய்யா