2022-12-04 1326

அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா?

கேள்வி: அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா?

பதில்: அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன். அம்மா பஃத்... "அகீகாவிற்காக அறுக்கப்படக்கூடிய ஆடானது அதனுடைய வயதெல்லை இரண்டு வருடங்கள் பூர்த்தியானதாக இருக்க வேண்டுமா?" அல்லது "ஒரு வருடம் பூர்த்தியானதாக இருக்க வேண்டுமா?" என்று பலரும் கேட்கின்றார்கள்.

அதாவது அகீகாவிற்குரிய ஆட்டைப் பொறுத்த வரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உழ்ஹிய்யாவிற்குரிய ஆட்டின் விடயத்தில் கூறியதைப் போன்று எந்தவிதமான வயதெல்லையையும் நிர்ணயித்துக் கூறிக்காட்டவில்லை. ஆனால் உழ்ஹிய்யாவிற்குரிய ஆட்டின் விடயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "ஓராண்டு பூர்த்தியான ஆட்டையே (முசின்னாவையே) அறுத்துக் குர்பானி கொடுங்கள்.

அது கிடைக்காவிட்டால் செம்பறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்டதை அறுத்துக் குர்பானி கொடுங்கள்". இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: சஹீஹ் முஸ்லீம்:3971)

மேற் கூறப்பட்ட இந்த அறிவிப்பில் இடம்பெறும் "முசின்னா" என்ற அரபுச் சொல்லுக்கு சில அறிஞர்கள் "இரண்டு வயது பூர்த்தியானது" என்றும் மற்றும் சிலர் "ஒரு வயது பூர்த்தியானது" என்றும் கருத்து வேறுபாடு கொள்கின்றார்கள். அது ஒரு பக்கம் இருக்க, அகீகாவோடு சம்மந்தப்பட்ட எந்தவொரு ஹதீஸ்களிலும் அகீகாவிற்காக அறுக்கப்படும் ஆட்டின் வயதெல்லை குறிப்பிடப்படவில்லை என்பதைக் கீழ்வரக்கூடிய ஒரு சில அறிவிப்புகளில் இருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

எடுத்துக்காட்டு 01: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது (அடைமானம் வைக்கப்பட்டுள்ளது). அக்குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அதற்காக அறுக்கப்படும். அத்தோடு அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்". அறிவிப்பவர் : சமுரா பின் ஜூன்துப் (ரழியல்லாஹு அன்ஹு) (ஆதாரம் : முஸ்னத் அஹ்மத் -20139)

அதாவது இந்த ஹதீஸில் "குழந்தைக்காக ஆடு அறுக்கப்படும்" என்பதே இடம்பெறுகின்றது. மாறாக அறுக்கப்படவேண்டிய ஆட்டின் வயதெல்லை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் நிபந்தனையிடப்படவில்லை.

எடுத்துக்காட்டு 02: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹசன் மற்றும் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹுமா) (ஆகிய இருவருக்காக) இரண்டு இரண்டு ஆடுகளை அகீகா கொடுத்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) நூல் : சுனன் நஸாயீ (4219)

மேற்கூறப்பட்ட இவ்வறிவிப்பிலும் அகீகாவிற்காக அறுக்கப்பட்ட அவ்வாடுகளின் வயதெல்லை பற்றி எந்தவொரு விடயமும் தெளிவாகக் கூறப்படாமல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் பேரப் பிள்ளைகளுக்கு அகீகா கொடுத்தார்கள் என்று மட்டுமே இடம்பெறுகின்றது. அகவே இந்த ஹதீஸிலிருந்து இவ்வாறு அவர்கள் அறுத்த அந்த ஆடுகள் ஆறு மாத ஆடுகளாகவோ அல்லது ஒரு வருட ஆடுகளாவோ அல்லது இரண்டு வருடம் பூர்த்தியான ஆடுகளாகவோ இருந்திருக்கலாம் என்று கருதமுடியும்.

எடுத்துக்காட்டு 03: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்.......... "யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் ஆட்டை அறுத்து வணக்கம் புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டை ஆண்குழந்தைக்கும், ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் கொடுக்கட்டும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) (நூல் : அஹ்மத்-6822)

மேற்கூறப்பட்ட இந்த ஹதீஸிலும் ஆட்டின் வயதெல்லை கூறப்படாமல் "ஆணுக்கு இரண்டும் பெண்ணுக்கு ஒன்றும் என அறுக்கப்படும்" என்று ஆட்டின் எண்ணிக்கை மட்டும் இடம்பெற்றுள்ளது. எனவே ஆக மொத்தத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் அகீகா விடயத்தில் பின்வருமாறுதான் கூறினார்கள்:

எடுத்துக்காட்டு 04: சல்மான் இப்னு ஆமிர் அள்ளப்பீ (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கிறார்கள்: "பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) `குர்பானி` கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்" என்றுஇறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் , சொல்ல கேட்டிருக்கிறேன். (ஆதாரம் : புஹாரி 5472)

ஆக "ஆடு அறுங்கள்" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆர்வமூட்டியதன் பிரகாரம் நாங்கள் ஆட்டை மட்டும் அறுத்தால் அது போதுமானதாக மாறிவிடும்.

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம் : உம்மு அப்தில்லாஹ் (ஷரயிய்யா).