2022-12-16 444

பள்ளிவாயிலினுள் நுழைபவருக்கு பள்ளிக் காணிக்கை தொழுகை கட்டாயக் கடமையா?

கேள்வி: பள்ளிவாயிலினுள் நுழைபவருக்கு பள்ளிக் காணிக்கை தொழுகை கட்டாயக் கடமையா?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

பள்ளிவாயிலினுள் நுழைபவர் கட்டாயம் பள்ளிக் காணிக்கை தொழுகை (தஹிய்யதுல் மஸ்ஜித்) தொழ வேண்டுமா? என சிலர் கேட்கின்றனர். இந்த தொழுகை சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸ்களை நோக்குகையில், நபியவர்கள் அது பற்றி இரு விதமாக கூறியிருக்கிறார்கள். ஒருமுறை- “உங்களில் ஒருவர் மஸ்ஜிதினுள் நுழைந்தால் அவர் அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்களை தொழுதுகொள்ளட்டும்.” என்றும் (பார்க்க ஸஹீஹ் புகாரி 444, ஸஹீஹ் முஸ்லிம் 714, முவத்தா மாலிக் 57, சுனன் அபீ தாவூத் 467, சுனன் திர்மிதீ 316, சுனன் நஸாஈ 730, சுனன் இப்னி மாஜா 1013, சுனனுத்தாரமீ 1433, முஸ்னத் அஹ்மத் 22523, முஸ்னதுல் ஹுமைதீ 425)

இன்னுமொருமுறை “உங்களில் ஒருவர் மஸ்ஜிதினுள் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்களை தொழாமல் அமர வேண்டாம்.” (பார்க்க ஸஹீஹுல் புகாரி 1171, ஸஹீஹ் முஸ்லிம் 714, சுனனுத்திர்மிதீ 316, முஸன்னப்ஃ அப்திர்ர்ஸ்ஸாக் 1673, முஸ்னத் அஹ்மத் 22601) இவ்விரு அறிவிப்புக்களையும் அபூ கதாதா அல்அன்ஸாரி (றழியல்லாஹு அன்ஹு) எனும் நபித்தோழர் அறிவிக்கிறார்கள்.

இங்கு நாம் அவதானிக்க வேண்டிய விடயம் நபியவர்கள் முதலாவது வார்த்தை பிரயோகத்தில் “தொழுதுவிட்டு அமருங்கள்” என கட்டளை பிறப்பிக்கிறார்கள். இரண்டாவது வார்த்தை பிரயோகத்தில் நபியவர்கள் “அத்தொழுகையை தொழாமல் அமர வேண்டாம்” என தடை செய்கிறார்கள். ஆகவே இங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பள்ளிக்காணிக்கை தொழுகையை தொழுமாறு ஏவியிருப்பதும், அதை தொழாமல் அமர வேண்டாம் என விலக்கியிருப்பதும் இத்தொழுகையானது ஒரு கட்டாயக்கடமையாகும் என்பதையே உணர்த்தி நிற்கின்றது. அதுமட்டுமல்லாமல் இவ்விடயத்தை மேலும் மேலும் வலியுறுத்தக்கூடியதாக இன்னுமொரு செய்தி அமைந்திருப்பதையும் காணலாம்.

ஜாபிர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு வெள்ளிக்கிழமை நாளில் நபியவர்கள் குத்பா ஆற்றிக்கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் பள்ளியினுள் வந்தமர்ந்தார். அப்போது நபியவர்கள் “நீர் தொழுதீரா?” எனக்கேட்டார்கள். அவர் “இல்லை” எனக்கூறினார். அதற்கு “நீங்கள் எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுங்கள்” என கூறினார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி 930, ஸஹீஹ் முஸ்லிம் 875, சுனன் அபீ தாவூத் 1115, சுனன் நஸாஈ 1400, சுனனுத்தாரமீ 1596, முஸ்னத் அஹ்மத் 14906, 14966, 15067, முஸ்னதுல் ஹுமைதீ 1257) மேற்படி செய்தியில் குத்பா நிகழ்த்திக்கொண்டிருந்த நபியவர்கள் தன் குத்பாவை இடை நிறுத்திவிட்டு பள்ளிக்காணிக்கை தொழுகை தொழாமல் அமர்ந்த மனிதரை அவதானித்து விட்டு அவரை எழுப்பி தொழுமாறு ஏவுகிறார்கள்.

உண்மையில், இத்தொழுகை ஒரு அவசியமான தொழுகையாக இல்லாமல், யார் தொழுதுகொள்கிறாரோ அவருக்கு நன்மை கிடைக்கும் என்பதாக இருந்திருந்தால் நபியவர்கள் அமர்ந்த மனிதரை எழுப்பி தொழுமாறு கட்டளையிட்டிருக்க தேவையிருந்திருக்காது. இங்கு நபியவர்கள் உட்கார்ந்த மனிதரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாமல் எழுந்து இரண்டு ரக்அதகளை தொழுமாறு ஏவியிருக்கிறார்களெனின் பள்ளிக்காணிக்கை தொழுகையென்பது வலியுறுத்தப்பட்ட ஒரு வணக்கமாகும் என்பது புலனாகிறது.

எனவே சகோதரர்களே! நாம் ஜும்ஆ தினத்தில் அல்லது பள்ளிவாயிலில் ஒரு கூட்டத்திற்கு சமூகமளிக்கையில் அல்லது வேறு வேறு சந்தர்ப்பங்களில் பள்ளிவாயிலினுள் நுழைந்தால் உட்கார முன் இரண்டு ரக்அத்களை தொழுது கொள்வோம். இது தான் நபிகளார் காட்டித்தந்த வழிமுறையாகும்.

இதில் நாம், இந்த தொழுகை சுன்னத்தான்னதா? அல்லது பர்ளானதா? அல்லது தொழாமலிருந்தால் குற்றமா? என கேள்விகளை எழுப்பி இந்த வணக்கத்தை விட்டு தூரமாகாமல் நபிகளார் எமக்கு இத்ததொழுகையை தொழுமாறு கட்டளையிட்டதன் பிரகாரம் நபியவர்களது கட்டளையை கடைப்பிடிப்போம். அல்லாஹ் தஆலா அனைவருக்கும் அருள்பாலிப்பானாக.

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)