திருமணம் முடிக்கவுள்ள நபருடன் பெண்ணை பேசிப்பழக விடலாமா?
கேள்வி: திருமணம் முடிக்கவுள்ள நபருடன் பெண்ணை பேசிப்பழக விடலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பேசி திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், திருமணம் நிகழ காலதாமதாகும் என தீர்மானிக்கப்படுகிறது. இந்தக்காலப்பகுதிக்குள் மாப்பிள்ளை என முடிவுசெய்யப்பட்டவரோடு குறித்த பெண்ணை பேச, பழக விடலாமா? என சில சகோதரர்கள் கேட்கின்றனர்.
சகோதரர்களே!
எமது மார்க்கத்தை பொறுத்தவரையில் ஒரு ஆண் தான் மணக்கப்போகும் பெண்ணை திருமணத்திற்கு முன் பார்ப்பது நபிவழியாகும். அதற்கு மார்க்கம் ஆசையூட்டியுள்ளது, அதை வரவேற்கிறது. நபியவர்கள் தான் மணக்க நாடும் பெண்ணை திருமணத்திற்கு முன் பார்த்துக்கொள்ளும்படி கூறியிருக்கிறர்கள். அதற்கிணங்க ஸஹாபாக்களும் அவ்வாறு செய்தார்கள். ஆகவே ஒரு ஆண் தன் மனைவியாக வரப்போகும் பெண்ணை திருமணத்திற்கு முன் பார்த்துக்கொள்வதென்பது சுன்னாவாகும்.
ஆனால், நாம் நன்றாக விளங்க வேண்டிய விடயம் மாப்பிள்ளை பெண்ணை பார்த்த பின் திருமண ஒப்பந்தம் (அதாவது பெண் தரப்பு வலீ, இரண்டு சாட்சிகள், மஹர் பற்றிய ஒப்பந்தம்) நிறைவேறாமல் அவர் அவளுக்கு ஒருபோதும் கணவனாக முடியாது. அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் திருமண ஒப்பந்தம் நிகழும் வரை அந்த பெண்ணுக்கு அந்த ஆண் கணவனாக முடியாது.
அவர் ஒரு அஜ்னபிய்யத்தான அந்நிய ஆணாகத்தான் நோக்கப்படுவார். இஸ்லாம் அவருக்கு பெண்பார்க்கும் சலுகையயை மாத்திரம் வழங்கியிருக்கிறது. மற்றும்படி அவள் அவருக்கு மனைவியாக மாறுவது திருமண ஒப்பந்தத்தின் பின்னரே தான்.
ஆனால் தற்போது பெண்பிள்ளைகள் தமக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் ஆண்களோடு கணவனோடு கதைப்பதைப்போல் கதைக்கிறார்கள். அவர்கள் இருவரும் கணவன் மனைவி போல பழகுகிறார்கள். பெற்றோர்கள் அவர்களை தனிமையில் இருப்பதைக்கூட கண்டுகொள்ளளாமல் விட்டு விடுகிறார்கள். இது அனைத்தும் தவறாகும்.
ஒரு அந்நிய ஆணுடன் கணவனோடு பேசும் வார்த்தைகளை பேசுவது அல்லது அந்த நடத்தையோடு நடந்து கொள்வது குற்றமாகும். இங்கே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆணுக்கு அஜ்னபிய்யத்தான ஆணுக்குரிய சட்டம் தான் பேணப்பட வேண்டும். அவர்களிருவரும் நீண்ட நேரம் அநாவசியமாக தனித்து பேச, பழக முடியாது.
பெண்பார்த்தல் எனும் நலவைத்தாண்டி அதற்கப்பால் கணவன் மனைவிற்கு மாத்திரம் அனுமதியான பேச்சு, நடத்தையை அவர்கள் இருவருக்கும் ஒருபோதும் அனுமதியாகாது அது தடுக்கப்பட்ட விடயமாகும். ஆகவே இவ்விடயத்தில் நாம் இஸ்லாம் வழங்கியிருக்கும் சலுகையோடு நின்றுகொள்ள வேண்டும். இல்லையென்றால் இது கைசேதத்திற்கும் பல பாவகாரியங்களுக்கும் வரம்பு மீறுதலுக்கும் வழிவகுக்கும்.
இன்று எமது ஊர்களில் நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்களின் பின் ஆணும் பெண்ணும் பேசிப்பழகிய நிலையில் சிலவேளை அவை பெற்றோர் தரப்பால் அல்லது வேறு சில காரணங்களால் இடையில் அறுந்து போய்விடுகின்றன. பின்னர் அது பல விபரீதங்களுக்கும், அசம்பாவிதங்களுக்கும் வழிவகுத்த செய்திகள் எம் காதுகளை எட்டாமலில்லை.
வரப்போகும் மனைவிக்கான அவசிய தேவைகளை கருத்திற்கொண்டு சில ஆகுமான பேச்சுக்களை அவர்களுக்கு பேசிக்கொள்ள அனுமதி இருக்கிறது. மற்றும்படி, மார்க்க ரீதியாக அந்த ஆண் அஜ்னபிய்யான ஆணின் எல்லையிலிருந்து தான் நோக்கப்படுவார். இந்த எல்லையை தாண்டிபோவது கூடாத காரியம் என்பதை புரிந்து நடப்போம்.
அல்லாஹ் தஆலா அனைவருக்கும் அருள்பாலிப்பானாக.
பதில் : மௌலவி அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)