2022-12-23 716

வலீமாவை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் தாமதமாகிக் கொடுக்கலாமா?

கேள்வி: வலீமாவை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் தாமதமாகிக் கொடுக்கலாமா?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

ஒரு சகோதரர் "வலீமாக் கொடுப்பதற்குத் தவறி விட்டது இன்னும் ஒரு வருடமாகியும் விட்டது.நான் இப்போது அவ்வலீமாவைக் கொடுக்கலாமா?" என்று கேட்கின்றார்.

இக்கேள்வி ஏன் கேட்கப்படுகின்றது என்று நாம் பார்க்கின்ற வேளையில் வலீமா என்றால் பாரிய அளவிலே ஐநூறு பேர் அல்லது அதற்கு மேலாக பெருந்தொகையினரை அழைத்து விருந்தளிக்க வேண்டிய ஒன்றாகும் என்று எம் சகோதரர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். அதனால் திருமணம் நடந்து மனைவியோடு வாழ்ந்து அவர்கள் வலீமாக் கொடுப்பதற்குப் பெருந்தொகையினரை எதிர்பார்த்து அதற்குரிய வசதி வாய்ப்புகள் வந்ததும் அதற்குப் பிறகு அவ்வலீமாவைக் கொடுக்க நினைக்கின்றார்கள்.

இவ்வாறாக பாரிய செலவில்தான் வலீமாக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை. அதாவது நான் இன்று இரவு மனைவியோடு இருந்துவிட்டேன் என்றால் அடுத்தநாள்  நான் வலீமா விருந்தளிக்க வேண்டும். விரும்பினால் வலீமா என்ற பெயரில் காலையில்  ஆகாரம் கொடுத்தோ அல்லது நண்பகலில் சாப்பாடு கொடுத்தோ விருந்தளிக்கலாம். அல்லது திருமணத்திற்காக வலீமா கொடுக்கிறேன் என்ற பெயரில் வெறுமனே நான்கு நண்பர்களை அழைத்து  அல்லது குடும்பத்திலுள்ள ஒரு சிலரை அழைத்து  சிறிய அளவிலான சிற்றூண்டியும் வழங்கலாம்.

அதாவது ஒருவர் இரண்டு சாட்சிகளோடு ஒரு பெண்ணை திருமணம் செய்கின்றார். அவர் இவ்வாறு இரண்டு சாட்சிகள் வைத்து  திருமணம் செய்ததானது வெளியில் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதனால் அவர் தான் திருமணம் செய்ததைப்  பகிரங்கப்படுத்தி அவருடைய சந்தோஷங்களை ஏனையவர்களுடன் பரிமாறிக்கொள்வதற்காக வலீமா விருந்து கொடுப்பார். இவ் விருந்திற்கு  அவர் நூறு பேரையோ அல்லது ஐநூறு பேரையோ அழைக்க வேண்டும் என்பதில்லை.

ஆனால் எம்மில் அதிகமானோர்  தம் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்து பெரியதொரு வலீமா விருந்து கொடுக்க வேண்டும்  என்றெண்ணி காலத்தைத்  தாமதப்படுத்துகின்றார்கள். இவ்வாறு ஒருவர் வலீமாவிற்காக  தன் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைக்க வேண்டும் என்றெண்ணுவதில் தவறில்லை. விரும்பினால் அவர் ஒட்டகத்தை  அறுத்தும் விருந்து கொடுக்க முடியும்.

ஆனால் அதற்காக அவர்  காலதாமதமாக்குவதென்பது நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் வழிமுறையல்ல. ஏனெனில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் தம் மனைவியோடு தங்கியதற்கு பின் அடுத்த நாள் வலீமா விருந்து கொடுத்தார்கள்.

அதாவது ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் யுத்தத்தில் திருமணம் செய்கின்றார்கள். விடிந்ததும் வலீமாக் கொடுத்தார்கள். இன்னும் அவரிடம் இருந்த உணவுப் பொருட்களை எடுத்து தன் நண்பர்களிடம் இருந்ததோடு சேர்த்து அனைபேரும் சாப்பிட்டார்கள்.

அவர்களின் வலீமாவும் முடிந்து விடுகின்றது.

எடுத்துக்காட்டு:

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கைபருக்கும், மதீனாவுக்கும் இடையில் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை மணமுடித்து மூன்று நாட்கள் தங்கினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வலீமா மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், பிலால் (ரழியல்லாஹு அன்ஹூ) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (மக்களுக்கு விருந்தளித்தார்கள்.)

அறிவிப்பவர் : அனஸ் (ரழியல்லாஹு அன்ஹூ) நூல்: புகாரி 4213.

இன்னும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வலீமாவிற்கு மட்டுமே ஆட்டை அறுத்தார்கள்.

எடுத்துக்காட்டு:

ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) விருந்தளித்ததில்லை. ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரழியல்லாஹு அன்ஹூ) நூல்: புகாரி 5168, 5171, 7421.

எனவே, நாம் நான்கு சகோதரர்களைச் சேர்த்து இதுதான் வலீமா என்று கூறி அவ் விருந்தை சிறிய அளவில் செய்தால் அது போதுமானதாகும். மாறாக, அதை நாங்கள் பெரிதாக செய்ய வேண்டும் என்று எண்ணி  வருடக்கணக்கில் தாமதிக்க வேண்டிய தேவையில்லை.

பொதுவாக இஸ்லாமிய அடிப்படையில் வலீமா என்ற பெயரில் சிறிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தாலே போதும் என்று புரிந்து கொண்டு  குடும்பத்திலிருந்து தன் சகோதரி மற்றும் அவளின் கணவர் என்று குறிப்பிட்ட ஒரு சிலரை அழைத்து இதுதான் வலீமா என்று விருந்து கொடுத்தாலே வலீமா முடிந்து விடுகின்றது. 

அவ்வாறு நாம் செய்துவிட்டு  நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டுமே என்றெண்ணி மீண்டும் ஒரு சாப்பாடு விருந்தை ஏற்பாடு செய்வதில் தவறேதும் இல்லை. ஆனால் அவ் விருந்து வலீமாவக் கருதப்படமாட்டது. ஏனெனில், வலீமா எனும் திருமண விருந்தானது திருமணம் முடிந்ததும் நம் சக்திக்குட்பட்ட அளவில் எம்மால் கொடுக்க முடியுமான ஒன்றாகும்.

உதாரணமாக  நூறு ரூபாய்க்கு நான்கு உணவுப் பொருட்கள்தான் வாங்க முடியுமாக இருந்தால் அவற்றைக் கொண்டும்  விருந்தளிக்கலாம். அதுவும் வலீமாவாகவே அமையும். அல்லது தேநீரோடு பேரீச்சம் பழங்களைக் கொடுப்பதற்குத் தான் வசதி உள்ளதென்றால் அதைக் கொடுத்தாலும் அதுவும் வலீமாவாகவே அமையும்.

எனவே, வலீமா என்பது திருமணத்தின் பேரில் கொடுக்கப்படும் ஒரு எளிய விருந்துதானே தவிர அதற்கு ஆடுதான் சமைக்க வேண்டும் அல்லது கோழிதான் சமைக்க வேண்டும் அல்லது மாடுதான் சமைக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டால்  வருடக்கணக்கில் உங்களின் வலீமாக்களைத் தாமதப்படுத்தமாட்டீர்கள்.

அல்லாஹ் உங்களுக்கு இவற்றைப் புரிய வைப்பானாக!

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)-

எழுத்தாக்கம்: உம்மு அப்தில்லாஹ்