எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸ்ரு செய்யலாம்?
கேள்வி: எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸ்ரு செய்யலாம்?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
பிரயாணம் செய்யும் நபர் எவ்வளவு தூரம் பயணம் செய்தால் தொழுகையை சுருக்கித்தொழலாம் என சிலர் கேட்கின்றனர். இந்த விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள், வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன. எனினும் இது பற்றிய ஆதரங்களினடிப்படையில் இதன் விளக்கத்தை சுருக்கமாக பார்ப்போம்.
தொழுகையை கஸ்ர் செய்வதென்பது ழுஹர், அஸர், இஷா போன்ற நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாக சுருக்கி தொழுவதாகும். இது நாம் அறிந்து வைத்திருக்கும் அடிப்படை அம்சம். பிரயாணியொருவர் எவ்வளவு தூரம் பயணம் செய்தால் தொழுகையை சுருக்கிக்கொள்ளலாமென்பது பற்றி நபிகளாரது ஹதீஸ்களில் நோக்கினோமெனின் உண்மையில், நாமறிந்த வரை நபிகளார் அந்த தூரம் பற்றிய வரையறையை நேரடியாக நிர்ணயித்து கூறியதாக எந்த ஹதீஸிலும் காண முடியாது. ஆனால், நபிகளாரது நடைமுறையிலிருந்து சில ஸஹாபாக்கள் சில செய்திகளை அறிவித்திருப்பதைக்காணலாம்.
ஒருமுறை அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் தொழுகையை கஸ்ர் செய்வது பற்றி கேட்கப்பட்டது. அதற்கவர்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மூன்று மைல் அல்லது மூன்று பஃர்ஸக் தொலைதூரத்திற்கு பயணம் செய்தால் தொழுகையை இரண்டு ரக்அத்களாக சுருக்கி தொழுதார்கள். எனக்கூறினார்கள்.
இந்த ஹதீஸில் இடம்பெறும் மைல் மற்றும் பஃர்ஸக் எனும் இரு வார்த்தைகளும் அக்கால வழக்கிலிருந்த தூரத்தை அளவிடும் இரு வெவ்வேறு அளவீடுகளாகும். ஆனால், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்களில் ஒருவருக்கு இந்த செய்தியில் இடம்பெற வேண்டிய சரியான சொல் எது என சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது .
அதன் காரணமாக அனைத்து அறிவிப்புக்களிலும் அவர் இரண்டு சொற்களையும் சேர்த்து அறிவித்திருப்பதைக்காணக்கூடியதாக உள்ளது (பார்க்க ஸஹீஹ் முஸ்லிம் 691, சுனன் அபீதாவூத் 1201, சுனனுல் குப்ரா லில்பைஹக்கீ 5446, முஸ்னத் அஹ்மத் 12313, முஸன்னப்ஃ இப்னு அபீஷைபா 8123)
அந்த அடிப்படையில் ஹதீஸில் இடம்பெற்றிருக்கும் மைல் எனும் அளவீடு தற்போது எமது வழக்கில் இருக்கும் தூரத்தை அளக்கும் அளவீடு கிடையாது. மாறாக, அது அக்காலத்தில் அரேபியர்களுக்கு மத்தியிலிருந்த ஒரு அளவீட்டு முறையாகும். அக்கால வழக்கின் படி மைல் எனும் அளவீடு ‘பஃர்ஸக்’ எனும் அளவீட்டை விட சிறிய பெறுமானம் கொண்டதாகும்.
ஆகவே ஹதீஸில் இடம்பெறுவது படி “மூன்று மைல்கள்” என்பது ‘’மூன்று பஃர்ஸக்”களை விட குறுகிய தூரமாகும். ஆக, மேற்படி ஹதீஸிலிருந்து பிரயாணி எவ்வளவு தூரம் பயணம் செய்தால் கஸ்ர் செய்யலாம் என்ற கேள்விக்கு நாம் ஒரு முடிவுக்கு வருவதாயின்- இங்கே அறிவிப்பாளருக்கு இரு அளவீட்டில் எது சரியென்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், இரு அளவீடுகளிலும் குறைந்தளவு தூரத்தை விட்டு விட்டு மிகக்கூடிய பெறுமானமுள்ள அளவீட்டை எடுப்பது தான் எமக்கு பேணுதலாக அமையும். அதாவது மூன்று பஃர்ஸக் என்பதாகும்.
மூன்று பஃர்ஸக் என்பது எமது தற்கால வழக்கின் படி கிட்டத்தட்ட 15.5 கிலோமீட்டர்களாகும். அண்ணளவாகக்கூறுவதாயின் 16 கிலோமீட்டர்கள் எனக்கூறலாம். ஆகவே, 16 கிலோமீட்டர்கள் தூரம் பிரயாணம் செய்பவர் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித்தொழலாம்.
இதேவேளை, இங்கு குறிப்பிடப்பட வேண்டிய இன்னுமொரு விடயம் ஒரு நபர் மூன்று பஃர்ஸக்களை விட குறைந்த தூர எமது வழக்கில் பிரயாணம் என கருதப்ப்படும் பயணத்திற்காக புறப்பட்டுச்செல்கின்றாரெனில் அவர் தன் பிரயாணத்தில் கஸ்ர் செய்யவும் முடியும்.
ஏனெனில், நபிகளார் ஓர் பயணி இன்ன தூரம் சென்றால் கஸ்ர் செய்ய முடியாது என்று எதையும் நிர்ணயிக்கவுமில்லை மேலும் இன்ன தூரத்தில் தான் கஸ்ர் கடமையாகும் என தன் வார்த்தையால் நிர்ணயித்தும் கூறவுமில்லை. மாறாக நபிகளாரின் பயணங்களை அவதானித்த நபிதோழர் எமக்கு அறிவித்த செய்தி தான் மேற்சொன்ன தூரம்.
அந்த அடிப்படையில், எமக்கு மத்தியில் வழக்கத்தில் நாங்கள் எதையெல்லாம் “இது ஓர் பிரயாணம் எனக்கருதுவோமோ அப்படியான ஓர் பிரயாணத்திற்கு வெளியிறங்கிச்சென்றால் அவருக்கு கஸ்ர் செய்யலாம். இதை சில அறிஞர்கள் விவரித்துக் கூறியிருக்கிறார்கள்.
இதை விபரக்கூறின் ஜும்மாவுக்கு ஆகக்குறைந்தது எத்தனை பேர் இருக்க வேண்டும்? என்ற கேள்விக்கான விளக்குமும் இதே அமைப்பில் தான் அமைவதைக் காணலாம்.
ஜும்மாவுடைய சந்தரப்பங்களில் சமூகமளித்திருந்தவர்களின் எண்ணிக்கையை அவதானித்த நபித்தோழர்கள் குறித்த அச்சந்தர்ப்பங்களில் வந்திருந்தவர்களின் எண்ணிக்கையை எமக்கு அறிவித்திருக்கிறார்களே தவிர நபிகளார் நேரடியாக திட்ட வட்டமாக ஒரு எண்ணிக்கையை நிர்ணயித்து கூறவில்லை.
ஆரம்பத்தில் மதீனாவில் இடம்பெற்ற ஜும்மாவிற்கு நாற்பது பேர் கலந்து கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறே இன்னுமொரு நாள் நபியவர்கள் ஜும்மா நடாத்திக் கொண்டிருந்த வேளையில் வியாபாரக்கூட்டமொன்று வந்த போது ஜும்மாவில் கலந்து கொண்ட பலரும் எழுந்து சென்றுவிட்டனர். மீதமிருந்த 12 பேருக்கு மாத்திரமே அங்கு ஜும்மா நிகழ்த்தப்பட்டது எனவும் அறிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் 40 பேர் அல்லது 12 பேர் ஜும்ஆவிற்கு கட்டாயம் இருப்பது அவசியம் என வாதிடமுடியாது ஆக, நபிகளாரது நேரடி வார்த்தை அல்லாமல் குறித்த சில நிகழ்வுகளை வைத்து இங்கு மேற்படி செய்திகள் அறிவிக்கப்படுவதால் அந்த எண்ணிக்கைக்குள் அல்லது பெறுமானத்திற்குள் இதற்கான சட்டத்தை வரையறுப்பது பொருத்தமாக அமையாது என்பதையே இங்கு சுட்டிக்காட்டுகிண்றோம் .
இது இவ்வாறிருக்க மேற்படி மூன்று பஃஸக்களை விட குறைந்த தூரத்தில் கஸ்ர் செய்வதை ஒருவர் ஏற்பதற்கு அவருக்கு சங்கடமாக இருக்கும் போது நாம் ஆரம்பத்தில் கூறிய ஹதீஸை வைத்து விளக்கிக் கூறியது போல் அவர் மூன்று பஃர்ஸக்16கிலோ மீற்றர்களை வைத்து தன் தொழுகையை கஸ்ர் செய்து கொள்வது அவருக்கு பேணுதலாக அமையும்.
அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன்.
பதில் : மௌலவி அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)