2022-12-27 501

நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?

கேள்வி: நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?.

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

அல்லாஹ் தன் திருமறையில் சூரத்துல் பகராவின் 286 ஆவது வசனத்தில் "அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுக்கமாட்டான்" என்று கூறுகின்றான்.

எனவே, தள்ளாடும் முதுமையில் இருக்கக்கூடிய ஒருவருக்கு அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கவில்லை. கடமையில்லாத ஒன்றுக்காக அவர் பித்யாக் கொடுக்க வேண்டிய தேவையுமில்லை. ஏனெனின், பித்யா என்பது தண்டமாகக் கொடுப்பதற்கும் அல்லது பிழைக் குற்றத்திற்கு பிராயச்சித்தமாக வழங்குவதற்கும் சொல்லப்படும் ஒன்றாகும்.

எனவே, அவர் நோன்பு நோற்காதது அவரின் மீது குற்றம் இல்லையென்பதால் அவர் தன் மீது குற்றமில்லாத ஒன்றிற்கு பிராயச்சித்தமாக பித்யாக் கொடுக்க வேண்டிய தேவையும் அவருக்கு இல்லை. ஆனால், ஒரு சில அறிஞர்கள் "அவருக்காக வேண்டி அவர் விடக்கூடிய ஒரு நோன்பிற்காக ஒரு ஏழைக்கு ஒரு வேளை உணவு வழங்க வேண்டும்" என்று தீர்ப்பளிக்கின்றார்கள்.

ஆகவே, இவ்வாறு ஏன் தீர்ப்பளிக்கின்றார்கள்? இதுபற்றி குர்ஆனில் அல்லாஹ் ஏதும்  கூறியிருக்கின்றானா? மேலும் எந்த ஆதாரத்தை வைத்து இவ்வாறு தீர்ப்பு வழங்குகின்றனர்? என்பது பற்றித் தெளிவாகப் பார்ப்போம். 

நோன்பின் சட்டதிட்டங்களைப் பற்றிக் கூறும் போது அல்லாஹ் தன் திருமறையில் நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று சூரதுல் பகராவின் 184 ஆவது வசனத்தில் கூறுகின்றான். அதாவது ஆரம்ப காலத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டபோது நோன்பு நோற்கச் சக்தி உடையோர் விரும்பினால் நோன்பு நோற்கலாம் அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம்'' என்ற சலுகை இருந்தது. 

அதனால் மக்களில் விரும்பியவர்கள் நோன்பை நோற்றும் நோன்பு நோற்க சக்திபெற்றும் நோன்பு நோற்க விரும்பாதவர்கள் அதற்காக பித்யாக் கொடுத்தும் வந்தார்கள்.

எனினும், இந்த சட்டமானது சூரதுல் பகராவின் 185 ஆவது வசனமான (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!) என்று இடம்பெறக்கூடிய வசனத்தின் மூலம் மாற்றப்பட்டு சக்தி உள்ள அனைவரும் ரமழான்  மாதத்தை அடைந்தால் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இது குறித்து சஹீஹூல் புஹா ரியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. சலமா பின் அக்வஃ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184 ஆவது) இறை வசனம் அருளப்பட்டபோது விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185 ஆவது வசனம்) அருளப்பெற்றது. நூல் : புஹாரி 4507

ஆகவே நோன்பு நோற்க முடியாதவர்கள் கட்டாயம் பித்யாக் கொடுக்க வேண்டும் என்று கூறுபவர்கள் நடைமுறையிலில்லாத  மாற்றப்பட்ட அவ்வசனத்தின் அடிப்படையிலேயே அவ்வாறு தீர்ப்பு வழங்கினர். ஆக,நோன்பு நோற்க சக்தி பெற்றவர்களுக்கு மட்டுமே ரமழான்  மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாகும் என்பதையும் அவ்வாறு சக்தியில்லாதவர்களுக்கு நோன்பு கடமையில்லை இன்னும் அதற்காக அவர்கள் பித்யாக் கொடுப்பது அவசியமில்லை என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்தோடு பேணுதல் என்ற அடிப்படையில் பித்யாக் கொடுப்பதற்கு ஒருவர் விரும்பினால் அவர் கொடுக்கலாம்.ஆனால் கொடுக்காமல் விட்டால் குற்றமில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி).