பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா?
கேள்வி: பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! ஒரு சகோதரருடைய கேள்விக்கான பதிலை நாங்கள் பார்ப்போம்.
அதாவது,ஒரு சிலர் தம் வீடுகளில் செல்லமாகப் பறவைகளையும் பிராணிகளையும் வளர்த்து வருகின்றனர். இது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்டதா? இன்னும் அவ்வாறு வளர்க்கின்ற போது அவற்றின் உரிமைகள் பறிக்கப் படுவதாகக் கூறப்படுகின்றது.
பறவைகள் என்றாலே அவை சுதந்திரமாக விரும்பிய இடத்திற்கு பறந்து செல்ல வேண்டும். ஆனால் இவ்வாறு கூண்டில் அவற்றைக் கட்டுப்படுத்தி வளர்ப்பதால் அவை விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியாதே? இதைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கின்றது? என்று கேட்கின்றார்கள்.
சகோதரர்களே! மார்க்க ரீதியாக வந்துள்ள சட்டத்தைப் பற்றிச் சொல்வதற்கு முன் நான் இன்னுமொரு முக்கிய விடயத்தையும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அதாவது நாம் வாழ்கின்ற நாட்டைப் பொறுத்து ஒரு சில பிராணிகளை வளர்க்க முடியுமா? இல்லையா? என்ற சட்ட விதிமுறைகளைப் பற்றி முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.
ஏனெனில் சில நாடுகளை நாங்கள் பார்க்கின்றோம் அங்கு புலியைக் கூட வளர்த்து வருகின்றார்கள். இவ்வாறு வீடுகளில் புலிகளை வளர்ப்பது இன்னும் ஒரு சில நாடுகளில் மிகப் பெரும் குற்றமாகக் கருதப் படுகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரை சில மிருகங்களை வளர்க்கலாம். இன்னும் சில மிருகங்களை வளர்க்க அனுமதியில்லை.
அவ்வாறு வளர்ப்பதென்றிருந்தாலும் அதற்கான அரச அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் இருக்கின்றது. எனவே அந்த அடிப்படையை நாங்கள் கருத்திற் கொண்டு சில விடயங்களை செய்து கொள்ள வேண்டும். இப்போது இந்த விடயத்தில் மார்க்க ரீதியாக அனுமதியிருக்கின்றதா? இது தொடர்பாக நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவித்தார்கள்; "நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (எம் வீட்டிற்கு) வரக்கூடியவர்களாக இருப்பார்கள். எனக்கு `அபூ உமைர்` என்றழைக்கப்பட்ட ஒரு சிறிய சகோதரர் இருந்தார். அவருக்கு ஒரு சிறிய பறவை இருந்தது. அவர் அப்பறவையுடன் விளையாடக்கூடியவராக இருப்பார். (ஒரு நாள்) அது இறந்துவிட்டது. அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்து அவர் கவலையாக இருப்பதைக் கண்டு அங்குள்ளவர்களிடம் அவருக்கு என்னவாயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு அவருடைய சிறிய பறவை மரணித்து விட்டது என்று கூறப்பட்டது. எனவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் `அபூ உமைரே! உன் சின்னக்குருவிக்கு என்ன ஆயிற்று?` என்று கேட்டார்கள். (ஆதாரம்: அதபுல் முப்ரத் -847, முஸ்னது அஹ்மத்-14071, சுனனு அபீ தாவூத் -4969.......)
இன்னும் இந்த ஹதீஸானது சஹீஹுல் புஹாரி மற்றும் சஹீஹ் முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் சுருக்கமாக இடம்பெறுவதையும் காணலாம். பார்க்க:சஹீஹுல் புஹாரி-6129,6203, சஹீஹ் முஸ்லிம்-2150.
மேற்கூறப்பட்ட இந்த ஹதீஸில் அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் சகோதரர் பறவையொன்றை வளர்த்து வந்தார். அது இறந்து விட்டது என்று இடம்பெறுகின்றது.
அவ்வாறு அவர் வளர்த்து வந்த பின் அப்பறவை இறந்தது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்திருந்தும் கூட 'இவ்வாறு பறவைகளை வீட்டில் வளர்க்கக் கூடாது' என்று ஒருபோதும் சொல்லவில்லை. இது முதலாவது விடயம். அதேபோன்று ஒரு பூனை விடயத்தில் ஒருவர் நரகம் போகின்றார் என்ற விடயத்தையும் நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும்.
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்; "ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை.
அறிவிப்பவர்:இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு). (ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி-3482).
மேற்கூறப்பட்ட இந்த ஹதீஸில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் அப் பெண் அந்தப் பூனையை அவிழ்த்து விடாமல் கட்டி வைத்திருந்தால் அதற்குத் தீனி போட்டிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஒரு விடயம் பிழையாக நடந்தால் அதை (சுட்டிக்காட்டி) தடை செய்வார்கள்.
அவ்வாறு அது பிழையில்லையென்றால் அந்த விடயத்தில் மௌனமாக இருப்பார்கள். அவர்கள் அவ்வாறு மௌனமாக இருந்தால் அந்த விடயம் அனுமதியானது என்றாகிவிடும். ஆகவே ஒருவர் பறவையையோ மிருகத்தையோ தீனி போட்டு சரியான முறையில் வளர்ப்பதற்கு மார்க்கத்தில் அவருக்கு எந்தத் தடையுமில்லை. விரும்பினால் அவர் பூனையும் வளர்க்கலாம்.
அதேபோன்று எமது நாட்டில் வளர்ப்பதற்கு அனுமதிக்கப்பட்ட பறவைகளை அதற்குரிய அனுமதிகளைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவற்றையும் அவர் வளர்க்கலாம்.
எனவே இவ்வாறு வளர்ப்பதற்கு மார்க்க ரீதியாக அனுமதி இருக்கின்றது தானே என்றெண்ணி நாட்டில் அனுமதிக்கப்படாத வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட சில பிராணிகளை ரகசியமாக வளர்த்து எங்களை நாங்களே குற்றவாளிகளாகவோ பிரச்சினைக்குரியவர்களாகவோ ஆக்கிவிடக்கூடாது என்பதையும் நான் இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
ஏனென்றால், ஒரு சில வாலிபர்கள் ஆர்வக் கோளாறு காரணமாக சில பிழைகளை செய்து வருகின்றனர். அதாவது அவர்கள் ஒரு விடயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கின்றார்கள் அதன் மறு பக்கத்தைப் பார்க்காமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் அடுத்த பக்கத்தையும் பார்க்க மார்க்கம் காட்டித் தந்திருக்கின்றது.
அதாவது, பறவைகளையோ மிருகங்களையோ வளர்ப்பது கட்டாயமான ஒன்றல்ல. அவ்வாறு வளர்த்தால் நன்மை கிடைக்குமென்றும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்லவுமில்லை. ஆக மிருகங்களை வளர்ப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கின்றதே தவிர அவ்வாறு செய்தால் நன்மை கிடைக்கும் என்றில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட சில விடயங்களைச் செய்வதாக இருந்தாலும் - நாம் செய்யும் செயல்களை நாம் வாழ்கின்ற பிரதேசத்தை அல்லது நாட்டைக் கருத்திற்க் கொண்டு அவற்றின் சட்ட வரையறைகளுக்கு அமைவாக நாம் அவற்றைச் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்கின்றேன்.
-அல்லாஹ் மிக அறிந்தவன் -
பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)
எழுத்தாக்கம்: உம்மு அப்தில்லாஹ்