மழை அதிகமாக பொழியும் போது வீட்டில் தொழலாமா?
கேள்வி: மழை அதிகமாக பொழியும் போது வீட்டில் தொழலாமா?
பதில்:- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
குளிர் கடுமையான நாட்களில் அல்லது மழை அதிகமாக பெய்யும் நாட்களில் மக்கள் பள்ளிகளுக்கு வருகை தருவதில் அசெளகரியங்களை சந்திப்பார்களாயின் வீடுகளில் தொழுதுகொள்வதற்கு எமது மார்க்கம் அனுமதியளித்துள்ளது. இதற்கு நபியவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். பல ஸஹாபாக்கள் அதை அமுல்படுத்தியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹு) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று சொல்ல ஆரம்பித்தபோது 'உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' (அஸ்ஸலாது ஃபீர் ரிஹால்) என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆச்சரியமாகப் பார்த்தனர். அதற்கவர் என்னை விடவும் சிறந்தவரான நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள்' எனக்கூறினார்கள். நீங்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை' என்றும் குறிப்பிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி 668, ஸஹீஹ் முஸ்லிம் 669)
மேலும், நபியவர்கள் ஸஹாபாக்களோடு பிரயாணங்கள் மேற்கொண்டார்கள். நபியவர்கள் யுத்தகளமாக இருந்தாலும் ஜமாஅத்தோடு தொழுவார்கள். செல்லும் பயணங்களில் ஆங்காங்கே கூடாரம் அடித்து தங்கினார்கள். மக்கள் அவ்வாறு தங்கியிருந்த வேளைகளில் மழையின் காரணத்தால் ஜமாஅத் தொழுகைக்கு வருவதில் சிரமப்படுவார்களாயின் முஅத்தினுக்கு ஹய்ய அலஸ்ஸலா எனக்கூறாமல் ஸல்லூ பீஃ ரிஹாலிகும்-'
உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என அறிவிப்பு விடுக்க பணிக்கக்கூடியவராக இருந்திருக்கிறார்கள்.
நாஃபிஉ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் (மக்காவை அடுத்துள்ள) ‘ளஜ்னான்’ எனும் இடத்தில் குளிரான ஓர் இரவில் பாங்கு சொன்னார்கள். அப்போது “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (ஸல்லூ ஃபீ ரிஹாலிக்கும்’) என்று அறிவித்தார்கள்.
பிறகு, அல்லாஹ்வின் தூதர் பயணத்தின்போது குளிரான அல்லது மழை பொழியும் இரவில் முஅத்தின் பாங்கு சொல்லும்போது பாங்கின் இறுதியில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபீ ரிஹாலிக்கும்) என்று அறிவிக்குமாறு பணிப்பார்கள்” என அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி 632, ஸஹீஹ் முஸ்லிம் 697)
மேலும், ஜாபிர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபியவர்களுடன் ஒரு பயணத்தில் புறப்பட்ட போது மழை பெய்தது. அப்போது நபிகளார் அவர்கள் உங்களில் விரும்பியவர் தமது கூடாரத்தில் தொழுது கொள்ளலாம் என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 698)
மேலும் உஸாமா இப்னு உமைர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஹுனைன் யுத்த நாட்களில் நாம் நபிகளாரோடு இருந்தோம். அப்போது (ஒருமுறை) மழை பொழிந்தது. நபியவர்கள் முஅத்தினுக்கு ஸல்லூ ஃபீ ரிஹாலிகும் (உங்கள் இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள்) எனக்கூறுமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்னத் அஹ்மத் 20702)
மேற்படி செய்திகளின் படி, மழை அதிகமாக பெய்யும் நாட்களில் அல்லது குளிர் கடுமையான நாட்களில் மக்கள் ஜமாஅத் தொழுகைக்கு சமூகம் தராமல் தம் இருப்பிடங்களில் தொழுது கொள்ள நபிகளார் வழிகாட்டியிருக்கிறார்கள் என்பதை அவதானிக்கலாம். அது ஊரில் இருக்கும் சந்தர்ப்பமாயினும் சரி அல்லது பயணத்தில் இருக்கு சந்தர்ப்பமாயினும் சரியே.
ஏனெனில் மேற்படி செய்திகளில் இப்னு அப்பாஸ்(றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஊரில் இருந்த சந்தர்ப்பமாகவும் இப்னு உமர், ஜாபிர், உஸாமா (றழியல்லாஹு அன்ஹும்) போன்றோரின் செய்திகள் பிரயாணத்தில் இருந்த சந்தர்ப்பத்திலாகவும் அமைந்திருக்கிறது.
ஆகவே இப்படியான சூழலில் எமது ஊர்களிலும் முஅத்தின்மர்களை 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' எனக்கூறாமல் ‘அஸ்ஸலாது ஃபீர் ரிஹால்’ என்றோ அல்லது மற்றுமொறு அறிவிப்பில் இடம் பெறுவதைப்போன்று ‘ஸல்லூ ஃபீ ரிஹாலிகும்’ என்றோ அறிவிப்பு விடுக்க பணிக்க வேண்டும். அதன் அர்த்தம் ‘உங்களில் இடங்களிலே தொழுது கொள்ளுங்கள்’ என்பதாகும். பள்ளிக்கு வந்து சேர்ந்தவர்கள் பள்ளியில் தொழுவார்கள். சிரமப்பட்டு வர வேண்டியவர்கள் வீட்டில் தொழுது கொள்வார்கள்.
இது நம் பள்ளிகளில் உயிர்ப்பிக்கப்பட வேண்டிய ஒரு நபி வழி சுன்னாவாகும்.
நாமறிந்தவரை இந்த நடைமுறை மிக அரிதாகவே அமுல்படுத்தப்படுகிறது. இதை எம் பள்ளிகளிலில் கட்டாயம் நடைமுறைப்படுத்துவோம். முஅத்தின் அந்த அரபு வார்த்தையை சேர்த்து அதான் கூறி முடிந்ததும் அதன் அர்த்தத்தை பின்னர் தமிழிலும் கூறுவது பொருத்தமாக அமையும். இல்லையெனின் மக்கள் அதை விசித்திரமாக பார்க்கத்தொடங்குவார்கள். ஆனால் இதுவொன்றும் புதிய விடயம் கிடையாது. நபியவர்கள் கூறியிருப்பதையே நாம் இங்கு கூறுகிறோம்.
சகோதரர்களே! இது அல்லாஹ் தஆலா எமக்களித்த ஒரு சலுகை. கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் மத்தியில் மக்கள் பள்ளிக்கு வர வேண்டுமென்பது கிடையாது. பள்ளியில் ஐவேளைத்தொழுகைகளை கட்டாயம் ஜமஆத்தோடு நிறைவேற்றவேண்டும் என்று கூறியவன் தான் மழை, குளிர்காலங்களில் பள்ளிக்கு வர வேண்டியது கட்டாயமில்லை என சலுகை வழங்கியுள்ளான். நிர்ப்பந்த சூழ்நிலைகளில் வீடுகளில் தொழுவது குற்றமாகாது. மாறாக, பள்ளியில் வீட்டில் தொழுமாறு அறிவிப்பு விடுப்பது நபிவழி சுன்னா என்பதையும் விளங்கிக்கொள்வோம்.
அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன்.
பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)