2023-01-28 541

ஜனாசாவின் கைகளை கட்டிவைப்பதும் கிப்லாவை நோக்கி காலை வைப்பதும் நபிவழியா?

கேள்வி : ஜனாசாவின் கைகளை கட்டிவைப்பதும் கிப்லாவை நோக்கி காலை வைப்பதும் நபிவழியா?

பதில் : புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

ஒருவர் இறந்துவிட்டால்  அவரின் கண் பார்வை பெரும்பாலும்  விழித்து மேல் நோக்கியே இருக்கும், இவ்வாறான நிலையில் அவரின் கண்களை மூடுவது நபிவழியாகும்.  ஏனென்றால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறந்து போன ஒரு சஹாபியின் கண்ணை அவர்களே மூடிவிட்டார்கள் என ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் தெளிவாக கூறப்பட்டதை காண்கின்றோம், இந்த விடயம் எம் சமூதயத்தில் நடைமுறையில் உள்ள விடயமாகும்.

அதனையடுத்து மையித்தின் காலை கிப்லாவை முன்னோக்கி  வைப்பதும் தக்பீர் கட்டிய நிலையில் அதன் கையை வைப்பதும் இன்று எம் மத்தியில் மிகப் பரவலாக காணப்படுகின்றது. இவ்வாறான  காரியங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டலிலோ அல்லது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் என்று சஹாபாக்களின் நடைமுறையிலோ வந்ததாக எந்தவொரு ஆதாரபூர்வமான செய்தியிலும் வரவில்லை.

இவ்விடயம் சில ஆதாரமற்ற பலயீனமான ஹதீஸ்கள் மூலமாக எம் சமூகத்தில் பரவிய ஓர் விடயமாகும் 

எனவே, ஒருவர் எவ்வாறு எந்த நிலையில் மரணிக்கின்றரோ அதே நிலையில் இருக்கலாம், அவர் ஒரு பாட்டில் படுத்தால் மக்கள் பார்வைக்காக நேராக வைக்கலாம் அது அனுமதியான விடயம் , இதற்கு மாற்றமாக அவரின் காலை கிப்லாவின் பக்கம் நீட்டி வைத்து, முகம் கிப்லாவின் பக்கம் பார்த்ததாக இருக்க வேண்டும் என வைப்பதும், அவரின் கையை தக்பீர் கட்டிய நிலையில் வைப்பதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டிய ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் கிடையாது 

அதை செய்பவர்கள் தங்கள் மீது அல்லாஹ்வும், அவனின் தூதரும் சுமத்தாட்டாத சுமையை தாங்களே சுமத்திக்கொள்கின்றனர்.

உதாரணமாக ஒருவர் வைத்தியசாலையில் மரணித்து  அவரின் சடலம் 5 அல்லது 6 மணித்தியாலங்களின் பிறகு தான் இவர்களிற்கு  கிடைத்தாலும்  தக்பீர் கட்டுவது மார்க்கம் கடமையாக்கிய ஒரு விடயம் என்றெண்ணி மருத்துபோன கையை உடைத்தாலும் கையை தக்பீர் கட்டி விடுகின்றனர் . அதன்பின் மையித்தை குளிப்பாட்டும் போது மறத்துப் போன கைகளை மீண்டும் மிகுந்த சிரமத்துடன் நேராக்கி மையித்தை நோவுனைப்படுத்துகின்றனர் .

இவ்வாறு மார்க்கம் செல்லாததை  செய்வதன் மூலம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வழிகாட்டாத ஒரு விடயத்தை செய்து இஸ்லாமிய வழிகாட்டலுக்கு மாற்றமாக செயற்படுகின்ர் . ஏனெனில்  மேற்சொன்ன நடைமுறைக்கு மாற்றமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள் "மரணித்தவரை நோவினைப்படுத்துவது உயிரோடு இருப்பவரை நோவினைப்படுத்துவதைப் போன்றாகும்" (சுனன் அபீ தாவூத் : 3207)

இந்த ஹதீஸ் மேற்கூறிய பலயீனமான செய்தியை விட வலுவானதாகும்

எனவே இந்த ஹதீஸின் மூலம் மார்க்கம் கடைமையாக்கியுள்ளதென எண்ணி சமூகத்தில் பரவலாக உள்ள விடயம் பிழையானது  என்பது தெளிவாகின்றது. ஆக, இவ்வாறான விடயங்களை தவிர்ந்துகொண்டு மார்க்கத்தை சரியான முறையில் அறிந்து நடைமுறைப்படுத்துவோம்.

அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் அருள்புரிவானாக !

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)