வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் அதிக நன்மைகளுள்ளதா ?
கேள்வி: வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் அதிக நன்மைகளுள்ளதா ?
பதில்: முஸ்லிம் சகோதர சகோதரிகளில் சிலர் சுன்னத்தான நோன்புகளை நோற்று அல்லாஹ்வின் அருளை பெற வேண்டும் என எண்ணி பல சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்றுவருவதை காண்கின்றோம். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்பதை சிறப்பாக கருதி செய்து வருவதை காண முடிகிறது.
இவ்வாறு வெள்ளிக்கிழமையை குறிப்பாக்கி சிறப்பாக கருதி நோன்பு நோற்பது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டலில் அனுமதியா என பார்க்கின்ற போது சிறப்பாக கருதுவதற்கும் அப்பால் இந்நாளில் நோன்பு நோற்பதையே நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் காணமுடிகின்றது
அபூ ஹுறைரா (ரலியல்லாஹூ அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் குறிப்பாக்கிக் கொள்ளாதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் குறிப்பாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!". ( ஸஹீஹ் முஸ்லிம் : 1144)
ஆகவே வெள்ளிக்கிழமையின் சிறப்பை குறிப்பாக்கி நோன்பு நோற்பதோ, இரவில் தொழுவதோ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் தடுக்கப்பட்ட விடயம் என்பதும், அதேவேளை ஒருவர் வழமையாக நோற்கும் நோன்பு ஒண்று வெள்ளிக்கிழமை நாளில் வந்துவிட்டால் அத்தினத்தில் நோன்பு நோற்பது அனுமதி என்பதும் இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகிறது.
அதாவது உதாரணமாக அரபா தின நோன்பு வழக்கமாக நோற்று வருகிறார். அந்த நோன்பு ஒரு வெள்ளிக்கிழமையில் அமைந்து விடுகிறது என்றால் அதனை அவர் வெள்ளிக்கிழமையில் தனித்து நோற்பது அனுமதியாகும். ஏனென்றால் அந்த நோன்பை அவர் வெள்ளிக்கிழமையை குறிப்பாக்கி நோற்கவில்லை; மாறாக அரபா தின நோன்பாக நோற்கிறார்.
அதே போன்று இன்னொரு அறிவிப்பில் அபூ ஹுரைரா (ரலியல்லாஹூ அன்ஹு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள், அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்க வேண்டாம்". (ஸஹீஹூ முஸ்லிம் : 1144)
அதாவது இந்த ஹதீஸ் மூலம் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு
முந்திய தினம் (வியாழக்கிழமை) அல்லது அதற்கு பிந்திய நாள் (சனிக்கிழமை) நோன்பு நோற்றால் வெள்ளியும் நோற்க அனுமதி உள்ளது என்பதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வழி காட்டியுள்ளதை புரிய முடிகிறது.
இவ்வாறு ஒரு நாள் முன்னர் அல்லது ஒரு நாள் பின்னராக நோற்கும் பட்சத்தில் தான் வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்க முடியும், மாறாக வெள்ளிக்கிழமைகளில் தனித்து குறிப்பாக்கி நோன்பு நோற்பது மார்க்கம் தடுத்த விடயமாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே பெருநாள் தினங்கள் நோன்பு நோற்க தடுக்கப்பட்ட நாட்கள் என்பதையும் அத்தினங்களில் நோன்பு வைப்பது பாவச் செயல் என்பதையும் எவ்வாறு அறிந்து வைத்துள்ளோமோ அதே போன்று தான் வெள்ளிக்கிழமையில் தனித்து நோன்பு நோற்பதும் பாவமான விடயம் என்பதை நாம் புரிய வேண்டும்.
வணக்க வழிபாடு விடயத்தில் மார்க்கம் காட்டித்தந்தவைகளை தவிர நன்மையாக கருதி நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை மனத்தில் ஆழமாக பதிய வைத்துக்கொள்வோம்.
எனவே மார்க்கம் காட்டித்தந்த அடிப்படையில் வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக...!!
பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)