ரமழான் கலா நோன்பை எதுவரை தாமதப்படுத்தலாம்?
கேள்வி: ரமழான் கலா நோன்பை எதுவரை தாமதப்படுத்தலாம்?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நாங்கள் ரமழான் மாத கடமையான நோன்பை எதிபார்த்திருக்கிறோம். இந்த வேளையில் நாங்கள் சென்ற வருடம் விட்ட நோன்புகள் இருக்கும். ஆண்கள் பிரயாணத்தின் காரணமாக விட்டிருக்கலாம். பெண்கள் மாதவிலக்கின் காரணமாக விட்டிருக்கலாம். இவ்வாறான நிலமையில் இருப்பவர்கள் தமது வேலைப்பளுவின் காரணமாக இதுவரை விடுபட்ட நோன்பை நோற்காமால் இருந்தால் ரமழான் ஆரம்பிப்பதற்கு முன் அந்த நோன்புகளை பிடித்துக்கொள்ள வேண்டும்.
ரமழானுக்கு முந்திய முதல் இரண்டு நாட்கள்- ஷஃபான் மாதத்தின் இறுதி நாட்களில் நோன்பு நோற்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆகவே, இதையும் கருத்திற்கொண்டு விடுபட்ட நோன்புகளை அடுத்த வருடங்களுக்கு தாமதப்படுத்தாமல் முறையாக நோற்றுக்கொள்ள வேண்டும்.
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள். “எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை (அடுத்த ரமளானுக்கு முந்தைய மாதமான) ஷஅபான் மாதத்தில் தவிர வேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடியாது. நபியவர்களுக்கு நான் பணிவிடை செய்ததே இதற்குக் காரணம்” அறிவிப்பவர்: யஹ்யா பின் சயீத் (ரஹ்) நூல்: புகாரி 1950, முஸ்லிம் 1146
ஆகவே ரமழான் மாதம் எம்மை எதிர்நோக்கியுள்ளதால் நாம் நோற்க வேண்டிய நோன்புகளை அவசர அவசரமாக பிடித்துக்கொள்வோம். அல்லாஹ் தஆலா அவனுக்கு பொருத்தமானா முறையில் நடக்க நல்லருள்பாலிப்பானாக. அல்லாஹ் மிக அறிந்தவன்.
பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி