2023-02-09 1053

மனைவி கணவனை பஸ்கு செய்தால் இத்தா இருக்க வேண்டுமா?

கேள்வி : மனைவி கணவனை பஸ்கு செய்தால் இத்தா இருக்க வேண்டுமா?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக!

ஒரு பெண் தனது கணவனை பஸ்கு செய்தால் இத்தா இருக்க வேண்டுமா? எவ்வளவு காலம் இத்தா இருக்க வேண்டும் போன்ற கேள்விகள் பலராலும் எழுப்பப்பட்டு வருவதனால் அதனை பற்றிய தெளிவை சுருக்கமாக பார்ப்போம். ஆரம்பமாக பஸ்கு என்றால் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ஒரு பெண் தனது கணவனுடன் வாழ விரும்பாத நிலையில் தனது வேண்டுகோளுக்கு அமைய (சுய விருப்பத்தின்படி) தனது கணவனிடம் விவாகரத்துக் கே‌ட்டு பெற்றுக்கொள்வதாகும். அதேவேளை கணவனால் மஹராக கொடுக்கபட்டவற்றை அப்பெண் அவரிடம் திருப்பி கொடுக்க வேண்டும்.

இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அமைகின்றது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் துணைவியர் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, "இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்று கூறினார். அப்போது, இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் , "ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (தந்து விடுகிறேன்)" என்று கூறினார். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), "தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!" என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி : 5273)

அதேபோன்று பஸ்கு செய்தால் இத்தா இருக்க வேண்டுமா? எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்ற விடயங்கள் பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளதை காணமுடிகிறது. 

"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அவர் குலுஃ (தானாக கேட்டு பெற்றுக் கொள்ளும் விவாகரத்து) செய்து கொண்டதாகவும் அப்போது (நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவ‌ர்க‌ளால்) அவர் ஒரு மாதவிலக்கு காலம் இத்தா இருக்க ஏவப்பட்டதாகவும் றுபைய்யிஃ  பின்த் முஅவ்வித் (ரலியல்லாஹு அன்ஹா) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்கள். (சுனனுத் திர்மிதி :1185)

இந்த ஹதீஸ் மூலம் பஸ்கு செய்த பெண் ஒரு மாதவிலக்கு காலம் இத்தா இருக்க வேண்டும் என்பதை தெளிவாக புரிய முடிகிறது.

அதேவேளை ஹதீஸில் கூறப்பட்டுள்ளன ஒரு மாதவிலக்கு காலம் என்பது பஸ்கு செய்யப்பட்ட நாளிலிருந்து அவள் மாதவிலக்கை அடைந்து அதிலிருந்து அவள் சுத்தமாகிக்கொள்ளும் வரை உள்ள காலப்பகுதியாகும். அது அவள் பஸ்கு செய்த நாளிலிருந்து ஒரு மாதத்தின் பின்னர் மாதவிலக்கை அடைந்தாலும் சரியே அல்லது பஸ்கு செய்த நாளுக்கு அடுத்த நாளே அப்பெண் மாதவிலக்கை அடைந்தாலும் சரியே.

அவள் மாதவிலக்கு அடைந்து அதிலிருந்தும் தூய்மையாகிவிட்டால் அவளது இத்தா காலம் முடிவடைந்து விடும். அதற்கு பின்னர் திருமண பேச்சுவார்த்தைகளில் அவள் விரும்பினால் ஈடுபட்டுக்கொள்ள முடியும்.

அதேவேளை மேற்கூறப்பட்ட றுபைய்யிஃ பின்த் முஅவ்வித் (ரலியல்லாஹு அன்ஹா) அவ‌ர்க‌ள் விடயத்தில் வந்துள்ள ஹதீஸின் கருத்துக்கு ஒப்பான கருத்துடைய இன்னொரு ஹதீஸ் சுனனுத் திர்மிதியில் தாபித் இப்னு கைஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மனைவி விடயத்தில் நிகழ்ந்ததாக இடம்பெற்றுள்ள போதிலும் அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் உள்ள ஒரு அறிவிப்பாளர் விடயத்தில் விமர்சனங்கள் உள்ளதால் அ‌ந்த செய்தியை ஆதாரமானதாக நாம் காணவில்லை.

எனினும் றுபைய்யிஃ பின்த் முஅவ்வித் (ரலியல்லாஹு அன்ஹா) விடயத்தில் வந்துள்ள ஹதீஸ் ஆதாரபூர்வமானதாக உள்ளமையால் ஒரு மாதவிலக்கு காலம் பஸ்கு செய்த பெண் இத்தா இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

அல்லாஹ் அவனது மார்க்கத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த அருள் புரிவானாக..! அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)