ஆடையை அழகாக அணிதல் எனறால் என்ன? ஆடையில் பெருமையடித்தால் என்றால் என்ன?
கேள்வி: ஆடையை அழகாக அணிதல் எனறால் என்ன? ஆடையில் பெருமையடித்தல் என்றால் என்ன?
பதில்; புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
நாம் அணியும் ஆடையில் பெருமை வெளிப்படுமா? ஆடையை அழகாக அணிந்து கொள்ளலாம் அல்லவா? ஆடையில் பெருமை அடித்தல் என்றால் என்ன? இது எப்போது பாவமான காரியமாகும் என ஒரு சகோதரர் கேட்கின்றார்.
இந்த கேள்வியை கேட்பதற்கு பின்வரும் ஹதீஸ் காரணமாக இருக்கிறது.
இப்னு மஸ்ஊத்(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடைகளும் என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார். அதற்கு இறைதூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்’ என விளக்கினார்கள். (முஸ்லிம் 91)
மேற்படி ஹதீஸின் படி ஆடையை அழகாக அணிந்து கொள்வதில் குற்றமில்லை அல்லவா? ஆடையில் பெருமை அடித்தல் என்றால் என்ன? என்று கேட்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக நபியவர்கள் முன்னொரு காலத்தில் ஆடையில் பெருமை அடித்த நபர் ஒருவரைப்பற்றி எமக்கு கூறியிருக்கிறார்கள்.
அபூஹுறைரா(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக்கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்றுகொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமைநாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டேயிருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 5789, முஸ்லிம் 2088)
இந்த ஹதீஸை நன்றாக கவனியுங்கள்!
இங்கு நபிகளார் கூறிக்காட்டும் மனிதர் அழகான ஆடையணிந்து நடந்து செல்கிறார். அவர் நடந்து செல்கையில் தற்பெருமை வெளிப்படுகிறது. அவருடைய ஆடையின் கவர்ச்சி அவருக்குள் ஒரு பெருமகிழ்ச்சியை, ஒரு புளகாங்கிதத்தை உண்டாக்கி தான் நடக்கையில் அவர் தன் நடையில் பெருமையை வெளிப்படுத்துகிறார்.
உண்மையில் அழகாக உடுத்தல் என்பதில் குற்றமில்லை. இந்த ஆடையை எனக்களித்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என அல்லாஹ்வைப்புகழ்ந்து அழகான ஆடைகளை அணிவது வேறு. ஆனால், அந்த ஆடை அவருக்குள் பெருமையை ஏற்படுத்துமாயின் அது தவறாகும். அந்த ஆடையை அணிந்து இல்லாத மக்களிடையே போகும் போது அவருக்குள் பெருமை ஏற்படுகிறது. அவருடைய நடையில், பேச்சில் அந்தப்பெருமை வெளியாகிறது எனின் இது தவறாகும். அப்படிப்பட்டவரைத்தான் அல்லாஹ் தஆலா பூமிக்குள் புதையச்செய்துவிட்டான். கியாமத் நாள் வரை பூமிக்குள் சென்று கொண்டே இருப்பார். அல்லாஹ் தஆலா பாதுகாப்பானாக.
இன்று நாம் சிலரைப்பார்க்கிறோம். வைபவங்களுக்கு நவ நாகரீக ஆடையணிந்து அல்லது கோட் சூட் அணிந்து வருவார்கள். சாரண் உடுத்தியிருக்கும் நான்கு பேருடன் சேர்ந்து கை கொடுத்து சந்தோசமாக சிரித்து கதைக்காமல் தனது ஆடை, அந்தஸ்த்துக்கேற்ற நபர்களை தேடிப்பபோய் உட்காருவார்கள். இதற்கு காரணம் அவர்களுக்குள் ஏற்படும் ஒரு பெருமையுணர்வாகும். அந்தப்பெருமை வாய்வார்த்தைகளால் வெளிப்படலாம். உடல் அசைவுகளால் வெளிப்படலாம். அவருடைய பாவனைகளில் வெளிப்படலாம். இவ்வாறு அல்லாஹ் தஆலா ஒருவருக்கு வழங்கும் அருட்கொடையையை வைத்து அவர் பெருமையடிக்கும் போது அங்கே அல்லாஹ்வின் கோபப்பார்வை இறங்குகிறது.
அல்லாஹ் இப்படிப்பட்ட பெருமையடிபவரை பூமியை பிளக்கச்செய்து அதனுள் புதையச்செய்திருக்கிறானென்றால் அது எவ்வளவு பெரிய பாவமாக இருக்கும்.
சகோதரர்களே! நாம் சிறிதாக எண்ணும் சில விடயங்கள் அல்லாஹ்விடத்தில் விபரீதமான விடயமாக இருக்கும். அது பெரும் பாவமாக இருக்கும்.
பெருமைக்கு சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவனே! உலகத்தில் படைக்கப்பட்ட எவரும் அந்தப்பெருமைக்கு சொந்தக்காரர் அல்ல. நாம் ஒருபோதும் பெருமையடிக்கக்கூடாது. எப்பொதும் பணிவுள்ளவர்களாக வாழ வேண்டும். நாம் பணத்தாலோ, பதவியாலோ, ஆடையாலோ உயர்வான்வர்கள் என நினைத்து விடக்கூடாது. இதுவெல்லாம் அல்லாஹ் எமக்கு அளித்திருக்கும் நிஃமத்-அருட்கொடைகள். அதற்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்துவோம். எஙகளை விட தாழ்வானவர்களை மதித்து நடப்போம். அல்லாஹ்வின் கோபப்பார்வையிலிருந்து விமோசனம் பெறுவோம்.
பதில்;மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)