பட்டினி நோன்பு நோற்கலாமா?
கேள்வி: பட்டினி நோன்பு நோற்கலாமா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அதாவது ஒருவர் நோன்பு நோற்பதற்காக சஹருக்கு எழும்புகின்ற எண்ணத்தோடு தூங்குகின்றார்.ஆனால் அவருக்கு சஹருக்கு எழும்ப முடியாமல் போய்விடுகிறது.இந்த வேளையில் அவர் பட்டினி நோன்புதான் நோற்க வேண்டி வருகின்றது.இவ்வாறு பட்டினி நோன்பு நோற்கலாமா? என்று கேட்கிறார்கள்.
சகோதர சகோதரிகளே! நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் சஹர் செய்வதை மார்க்கமாக்கினார்கள். "நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!"என்று இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்"
அறிவிப்பவர்:அனஸ் இப்னு மாலிக்(ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: சஹீஹுல் புகாரி -1923.
ஆக சஹர் செய்து நோன்பு நோற்பதென்பது அல்லாஹ்வின் தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காட்டித்தந்த ஒரு வழிமுறையாகும். அதற்கு மாற்றமாக ஒருவர் வேண்டுமென்றே சஹர் செய்யாமல் பட்டினி நோன்பு நோற்றால் அல்லாஹ் அதை விரும்பமாட்டான். இன்னும் அது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கு புறம்பான காரியமுமாகும்.
இது சுன்னத்தான நோன்பின் சட்டமாகும்.
அதே வேளையில் கடமையான நோன்பிற்காக வேண்டி ஒருவர் சஹர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தூங்குகின்றார். அவரால் சஹருக்கு எழும்ப முடியவில்லை. என்றாலும் அவர் நோன்பு நோற்க வேண்டிய கடமைப்பாட்டில் இருப்பதால் சஹர் செய்யாவிட்டாலும் அந்த நோன்பை தொடர்வது அவரின் மீது அவசியமாகும். அத்தோடு நோன்புடைய நிலையில் அந்த நாளில் உண்ணுவது,பருகுவது மற்றும் நோன்பை முறிக்கக் கூடிய எந்தக் காரியங்களையும் அவர் செய்ய முடியாது.
நாம் முன்னர் கூறியவாறு நோன்பின் போது சஹர் செய்வதென்பது ஒரு மனிதனுக்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களால் வழிகாட்டப்பட்ட ஒரு வழிமுறைதானே தவிர சஹர் செய்யாத நிலையில் கடமையான நோன்பை நோற்றால் அவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது என்றில்லை.ஏனெனில் அவர் சஹர் செய்யாமலே நோன்பைத் தொடர வேண்டிய கடமைக்குள்ளானவராக இருக்கின்றார்.
அதாவது ஒரு காலத்தில் ரமழானுடைய நோன்பிற்கு முன்னர் ஆஷுரா நோன்பு கடமையாக இருந்தது.அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் அன்று ஆஷுரா தினமாக அறிந்த போது யாரெல்லாம் இன்று சாப்பிட்ட நிலையில் காலைப் பொழுதை அடைந்தார்களோ அவர்கள் நோன்பைத் தொடரட்டும் என்றும் இன்னும் எவர் சாப்பிடாமலேயே காலைப் பொழுதை அடைந்தார்களோ அவர்களும் நோன்பைத் தொடரட்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.
எடுத்துக்காட்டு:
இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் அஸ்லம் குலத்தாரில் ஒருவரிடம், `உம்முடைய குலத்தாரிடையே` அல்லது `மக்களிடையே` முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா) அன்று, `(காலையில்) சாப்பிட்டுவிட்டவர் தன்னுடைய நாளில் எஞ்சியிருப்பதை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்; சாப்பிடாமலிருப்பவர் (அப்படியே) நோன்பு நோற்கட்டும் என்று அறிவிப்புச் செய்` என்றார்கள். அறிவிப்பவர்:ஸலமா இப்னு அல்அக்வஃ(ரழியல்லாஹு அன்ஹூ) ஸஹீஹுல் புகாரி :7265.
எனவே நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களுடைய இந்த வழிகாட்டலுக்கு அமைவாகவே மேற்கூறப்பட்ட கடமையான நோன்பிற்குறிய சட்டமும் அமையும். அதேபோன்று தான் ஒருவர் நாளை ரமழான் நோன்பு ஆரம்பம் என்று அறியாத நிலையில் காலையில் கண்விழிக்கின்றார்.ஆனால் ஊரிலுள்ள அனைவரும் நோன்பு நோற்றிருக்கின்றார்கள்.இந்நிலையில் அவர் நோன்பென்று அறிந்த அந்த நேரத்திலிருந்து நோன்பைத் தொடர்வது அவரின் மீது அவசியமாகும்.
அதேபோன்று இன்னுமொருவர் நோன்பென்று அறியாத நிலையில் அதிகாலையில் எழுந்து சாப்பிட்டு விட்டார். ஆக அவர் காலை உணவை உட்கொண்டிருந்தாலும் நோன்பைத் தொடர்வது அவசியமாகும்.அப்போது அவர் நோன்பாளியாகவே கருதப்படுவார். "அவர் சாப்பிட்டுவிட்டாரே! அது எவ்வாறு நோன்பாக அமையும்?" என்று கேட்கப்படலாம்.
அதாவது ஒருவர் நோன்பாளியாக இருந்து கொண்டு மறந்து சாப்பிட்டால் எவ்வாறு அவருடைய நோன்பு முறியாதோ அதேபோன்று தான் இதெனுடைய சட்டமும் அமையும்.
ஏனெனில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள்,நோன்பு காலங்களில் ஒருவர் மறதியாக சாப்பிடும் விடயத்தில் பின்வருமாறு கூறினார்கள்;
"ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்". அறிவிப்பவர்:அபூ ஹுரைரா(ரழி யல்லாஹு அன்ஹூ) . ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி :1933.
இதன் பிரகாரம் ஒருவர் கடமையான நோன்பென்று அறியாத நிலையில்அதிகாலையில் எழுந்து சாப்பிட்டாலும் அவர் நோன்பாளியாகவே கருதப்படுவார். ஆக அல்லாஹ் எமக்கு இந்த விடயங்களில் தெளிவைத் தருவானாக!. அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன்
பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி