2023-03-17 483

மாதவிலக்கு முடிந்ததாக எண்ணி நோன்பு நோற்ற பின் இரத்தத்தைக் கண்டால்?

கேள்வி:  மாதவிலக்கு முடிந்ததாக எண்ணி நோன்பு நோற்ற பின் இரத்தத்தைக்கண்டால்…?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக!

ஒரு சகோதரி கேட்கும் கேள்வி-

நோன்பு பிடிக்க வேண்டிய ரமழான் மாதத்தில் நாங்கள் சில நாட்களுக்கு மாதவிலக்கோடு இருக்கிறோம். மாதவிலக்கு முடிந்து விட்டது எனக்கருதி நாம் குளித்து சுத்தமாகி நோன்பை நோற்கிறோம். ஒரு நாள் நோன்பை பிடித்தும் விட்டோம். நோன்பு திறந்ததன் பின் மீண்டும் மாதவிலக்கிற்கான இரத்த அடையாளத்தை காண்கிறோம். இந்த வேளையில், இடையில் நாம் நோற்ற நோன்பின் நிலையென்ன? எனக்கேட்கிறார்.

இதற்கான பதிலை சற்று விரிவாகவே பார்க்க வேண்டியுள்ளது.

உண்மையில், சில பெண்கள் மாதவிலக்குடைய காலத்தில் விடும் நோன்பை பிற்காலத்தில் நோற்பது சிரமமாக இருக்குமெனக்கருதுவதால் மாதவிலக்கு சரியாக முடிவடைவதற்கு முன்னர் அவர்கள் அவசரப்பட்டு குளித்து துப்பரவாகிக்கொள்கிறார்கள். அதாவது, சாதாரண காலங்களில் ஏழு நாட்களுக்கு மாதவிலக்குடைய நிலமையில் இருக்கும் ஒரு பெண், ரமழான் காலத்தில் ஆறாம் நாளில் மாதவிலக்கின் இரத்த அடையாளம் தென்படவில்லையென குளித்து அவசரமாக சுத்தமாகிகொள்கிறாள். ஏழாம் நாள் ஸஹர்  செய்து நோன்பு நோற்கிறாள். மக்ரிப் நேரம் நோன்பு திறந்த பின் மாதவிலக்கிற்கான இரத்த அடையாளத்தை காண்கிறாள்.

சகோதரிகளே!

அபூ ஸஈத்(றழி) அவர்கள் நீண்ட ஒரு செய்தியில் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.'' (புகாரி 1951)

மேலும், ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு ஏவப்படவில்லை. (முஸ்லிம் 508)

இங்கு நம் சகோதரிகள் கவனிக்க வேண்டிய விடயம்- அல்லாஹ் தஆலா பெண்களாகிய உங்களுக்கு மாதவிலக்குடைய நாட்களில் நோன்பை விடுவதற்கு சலுகையளித்துள்ளான். அந்நோன்புகளை பின்னர் நீங்கள் கழா செய்து கொள்ள வேண்டும். அதற்காக அடுத்த வருட ரமழான் வரையான நாட்கள் உங்களுக்கு அவகாசம் இருக்கிறது. 

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஆயிஷா(றழி) அவர்கள் கூறியதாவது: எனக்கு ரமழானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை (அடுத்த ரமழானுக்கு முந்தைய மாதமான) ஷஃபான் மாதத்தில் தவிர வேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடியாது. நபியவர்களுக்கு நான் பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் (புகாரி 1950, முஸ்லிம் 1146)

ஆகவே, நாம் ரமழானில் மாதவிலக்கு ஏற்பட்டு நோன்பை விடுவதால் பின்னர் அதை கழா செய்வதை கஷ்டமாக எண்ணிவிடக்கூடாது. அவ்வாறு எண்ணினாலும், அதற்காக வேண்டி பிழையான சில முறைகளை கையாளக்கூடாது. அதாவது, ரமழான் கால நோன்புகளை பின்னர் நோற்பது சிரமமெனக்கருதி மாதவிலக்கு பூரணமாக முடிவடைவதற்கு முன்னர் அவர்கள் அவசரப்பட்டு குளித்து சுத்தமாகிக்கொள்வது பிழையான காரியமாகும்.

ரமழானில் மாதவிடாய்க்காரணமாக நோன்பை விட்டு விட்டு சுத்தமாகி நோன்பு நோற்க தயராகும் பெண்கள் இரு நிலைப்படுகளில் ஒன்றில் இருக்க வேண்டும். 

முதலாவது- 

ரமழான் காலங்களில் ஏனைய சாதரண மாதவிடாய் நாட்களை போலல்லாமல் அவசரப்பட்டு முந்தி குளித்து சுத்தமாகுபவர்கள். இப்படிப்பட்ட ஒரு பெண் ஒரு நோன்பை பூரணமாக நோற்ற பின்னர் இரத்த அடையாளத்தைக்கண்டால் அவள் தன் மாதவிடாய் நாட்களில் நோன்பு நோற்றதாகவே கருதப்படுப்படுவாள். ஏனெனில் அவள் தன்னுடைய மாதவிலக்கிலிருந்து பூரணமாக சுத்தமடையாமல் அவசரமாக சுத்தமாகிக்கொண்ட காரணத்திலேயாகும். ஆகவே, இந்த நோன்பை அவள் கழா செய்து தான் ஆக வேண்டும். 

இரண்டாவது-

சாதாரண மாதவிடாய் நாட்களைப்போல் ரமழான் காலத்திலும் நாட்களை கணக்கெடுத்து நோன்பை விட்டவர்கள். அதாவது, நோன்பு அல்லாத காலங்களில் 07 நாட்கள் மாதவிலக்கோடு இருக்கும் பெண் அதே 07 நாட்களுக்கு ரமழான் காலத்திலும் நோன்பை விடுகிறார்.  இப்படிப்பட்ட பெண்கள் தமது மாதவிலக்கு முற்றாக நிற்கும் வரை காத்திருந்து சுத்தமாகி நோன்பை நோற்கிறார்கள். அவர்கள் நோன்பை நோற்கும் போது தான் மாதவிலக்கிலிரிந்து பூரணமாக சுத்தமாகி விட்டேன் என்ற உறுதிப்பாட்டுடனேயே நோன்பை நோற்கிறார்கள். 

ஆனால், எதிர்பாராத விதமாக நோன்பைத்திறந்த பின்னர் வழமைக்கு மாற்றமாக மாதவிலக்கின் அடையாளத்தை காண்கிறார்கள். வழமைக்கு மாற்றமான இந்த இரத்தத்திற்கு காரணம், அது ஒரு நோயாக இருக்கலாம். அல்லது அம்மாதத்தில் மாதவிலக்குடைய நாட்கள் மற்றைய காலப்பகுதிக்கு மாற்றமாக திடீரென ஒரு நாள் மேலதிகமாக இருந்திருக்கலாம். 

இப்படிப்பட்ட பெண்கள் தாம் இடையில் சுத்தமாகி நோற்ற நோன்பை கழா செய்யத்தேவையில்லை. ஏனெனில், அவர்கள் அந்த நோன்பை நோற்கும் போது பூரணமாக சுத்தமாகிவிட்டேன் எனும் மனோநிலையிலே பிடித்திருக்கிறார்கள். மேலும், ஏனைய மாதங்களில் மாதவிடாய் நாட்களை கணக்கெடுப்பது போன்றே இக்காலப்பகுதியிலும் கணக்கெடுத்திருக்கிறார்கள். இங்கே இவர்களது எண்ணமும், செயலும் சரியாகவே இருந்துள்ளது. அதற்கேற்பவே நோன்பு நோற்றிருக்கிறார்கள் என்பதால் இவர்கள் அந்த நோன்பை கழா செய்வது கடமையில்லை.

காரணம் ஏனைய மாதங்களில் அவர்கள் பழக்கப்படுத்திக்கொண்டதன் பிரகாரம், அவர்கள் தாம் பூரண சுத்த நிலையை அடைந்த எண்ணத்துடனேயே நோன்பு வைத்தர்கள்.  ஆனால், வழமைக்கு மாற்றமாகத்தான் மாதவிலக்கு மேலதிகமாக ஒரு நாள் நீடித்தது. 

இந்த சட்டத்தை கீழ்வரும் ஹதீஸ் மூலமாக விளங்கிகொள்ளலாம்.

அபூ ஸஈத்(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒருமுறை நபி(ஸல்‌) அவர்கள்‌ தொழுகையை நடாத்திக்‌ கொண்டிருக்கும்‌ போது தமது பாதணிகளை ஒருபுறமாகக்‌ கழற்றி வைத்தார்கள்‌. இதை அவதானித்த தோழர்‌களும்‌ தமது பாதணிகளையும்‌ கழற்றி வைத்தார்கள்‌. தொழுகை முடிந்ததும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தோழர்களை நோக்கி "நீங்கள்‌ ஏன்‌ உங்களது பாதணிகளை கழற்றி வைத்தீர்கள்‌? எனக்கேட்டபோது "யா ரசூலல்லாஹ்‌! நீங்கள்‌ செய்ததனாலேயே நாங்களும்‌ அவ்வாறு செய்தோம்‌ எனக்‌ கூறினார்கள்‌. அதற்கு

நபி (ஸல்‌) அவர்கள்‌ எனது பாதணியில்‌ நஜீஸ்‌ இருப்பதாக ஜிப்ரீல்‌ (அலை) அவர்கள்‌ அறிவித்ததனாலேயே நான்‌ அவ்வாறு செய்தேன்‌. நீங்கள் கழற்றியிருக்கத்தேவையில்லை” எனக்‌ கூறினார்கள்‌. (முஸ்னத் அஹ்மத் 11877, முஸன்னப்ஃ இப்னி அபீ ஷைபா 334)

இந்த ஹதீஸை நன்றாக கவனியுங்கள்!

நபி(ஸல்)  அவர்கள் சிலவேளை பாதணியணிந்தும் தொழுவார்கள். ஆகவே, இந்த சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) பாதணியுடன் தொழுவிக்கிறார்கள். ஸஹாபாக்களும் பின்னால் தொழுகிறார்கள். திடீரென நபி(ஸல்)  அவர்கள் பதணியை கழற்றுகிறார்கள்.  பார்த்துக்கொண்டிருந்த ஸஹாபாக்கள் தாமும் கழற்றுகிறார்கள். அது நபி(ஸல்) அவர்களை ஸஹாபாக்கள் பின்பற்றிய விதம். நபிகளார்(ஸல்) செய்வதையெல்லாம் செய்வார்கள். தொழுது முடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் ஏன் பாதணியை கழற்றினீர்கள் எனக்கேட்கிறார்கள். ஸஹாபாக்கள் ‘நீங்கள் கழற்றியதன் காரணத்தால் நாங்களும் கழற்றினோம்’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்)  அவர்கள் “எனது பாதணியில் நஜீஸ் இருப்பதாக அறிவிக்கப்பட்டது” எனக்கூறினார்கள். 

பொதுவாக, தொழுகையாளி தொழும் போது சுத்தமான நிலையிலே தொழ வேண்டும். தன் ஆடையுட்பட அனைத்தும் நஜீஸிலிருந்து தூய்மையான நிலையிலே தொழ வேண்டும். இங்கே நபிகளார்(ஸல்) தனது எண்ணத்தில் நஜீஸ் இல்லை என்ற நிலையில் தொழுகையை ஆரம்பித்தார்கள். ஆனால், உண்மையில் அவர் அறியாத வகையில் பாதணியில் நஜீஸ் இருந்திருக்கிறது. தன் பாதணியில் நஜீஸ் இருப்பதாக தெரிந்ததும் உடனே பாதணியை கழற்றினார்கள். தொழுகையின் எஞ்சிய ரக்அத்களைப்பூரணப்படுத்தினார்கள். 

நபி(ஸல்) அவர்களது எண்ணம் சரியாக இருந்த நிலையில் தொழுத ரக்அத்களை மீட்டித்தொழவில்லை. அதாவது, நபி(ஸல்)  அவர்கள் பாதணியில் நஜீஸ் இருந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுதிருந்தால் அந்த இரண்டையும் மீட்டித்தொழவில்லை.  

இதில் நாம் விளங்க வேண்டிய விடயம்-

நபி(ஸல்) அவர்கள் தான் சுத்தமாக இருப்பதாக்கருதி அந்த வணக்கத்தை துவங்கினார்கள். இடையில் அவரில் நஜீஸ் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதும் அதை கழற்றிவிட்டு தொழுகையை தொடர்கிறார்கள். உடனடியாகவே, நஜீஸிலிருந்து நீங்குகிறார்கள். பின்னர் தொழுகையை தொடர்ந்தார்கள்.

இங்கே ஒரு வணக்கத்தை செய்பவரது எண்ணம் கவனிக்கப்படுகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

சகோதரிகளே!

பொதுவாக நீங்கள் உங்கள் மாதவிலக்குடைய நாட்களின் எண்ணிக்கையை உங்கள் உடல் நிலைக்கேற்ப அறிந்து வைத்திருப்பீர்கள். அதை அடிப்படையாக வைத்து நீங்கள் சுத்தமாகி உறுதியான நிலையில் நோன்பை பிடிக்கிறீர்கள். நோன்பை பூரணமாக நோற்று திறந்த பின்னர் இரத்த அடையாளத்தை காண்கிறீர்களென்றால் அந்த நோன்பு இறைவனிடத்தில் செல்லுபடியாகும். ஏனெனில், நீங்கள் நல்ல உறுதியான எண்ணத்தில் தான் அதை நோற்றிருக்கிறீர்கள். அதை கழா செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இதேவேளை நீங்கள் பூரணமாக தூய்மையடையாமல் அவசரப்பட்டு சுத்தமாகிக்கொண்டால் இடையில் நோற்கும் நோன்பை கழா செய்து தான் ஆக வேண்டும். மேற்படி விளக்கக்கூறியிருக்கும் இரு நிலமைகளின் வித்தியாசங்களையும் கருத்திற்கொண்டு தான் இந்த சட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண்ணைப்பொறுத்தவரையில் மாதவிடாய் நாட்களை கணிப்பிடுவதென்பது அவரவரது உடல் நிலையைப்பொருத்ததாக அமையும். 

அல்லாஹ் தஆலா மிக நியாயமானவன். எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கப்பால் கஷ்டப்படுத்துவதில்லை.  அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன்.

பதில்: மௌலவி MI. அன்சார் (தப்லீகி)  அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)