தோல் நிறத்தை மாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
கேள்வி: தோல் நிறத்தை மாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
சிலர் பிறக்கும் போது கறுப்பு நிறத்தைச்சார்ந்தவர்களாகவே பிறக்கின்றனர். அவர்கள் தம் நிறத்தை பொருந்திக்கொள்ளாததால் அழகு சாதனப்பொருட்கள், கிறீம் வகைகளைப்பாவித்து தம் தோல் நிறத்தை நிரந்தரமாக மாற்றுகிறார்கள். சிலர் முகத்தை மட்டும் மாற்றுகிறார்கள். சிலர் முழு உடம்பையும் மாற்றுகிறார்கள்.
இது மார்க்க ரிதியாக அனுமதியாகுமா எனக்கேட்டால்-
நபி(ஸல்) அவர்களது காலத்தில் இவ்வாறு தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் நடைமுறை இருக்கவில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சில அலங்கார நடைமுறைகளை தடை செய்து அதற்கான காரணத்தையும் கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அமைத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர் : நூல் : புகாரி (5931)
நபி(ஸல்) அவர்கள் பச்சைக்குகுத்துபவர்களை சபித்திருக்கிறார்கள். பற்களை முத்து போல் இருக்க இருக்க வேண்டும் என விரும்பி அதை கூராக்கிக் கொள்பவர்களை சபித்திருக்கிறார்கள். கண் புருவங்களை வில் போன்று இருக்க வேண்டும் என விரும்பி அதை செயற்கையாக வடிவமைத்துக்கொள்பவர்களை சபித்திருக்கிறார்கள். பொய் முடியை வைத்து அலங்கரித்துக்கொள்ளும் பெண்களையும் சபித்திருக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் இக்கூட்டத்தார்களை சபித்து விட்டு அதற்கு காரணத்தை கூறுகையில் ‘அவர்கள் அல்லாஹ்வின் படைப்பின் அமைப்பை மாற்றக்கூடியவர்கள்” எனக்கூறிக்காட்டுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல், அல்லாஹ்வின் படைப்பின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் ஷைத்தானின் வழியில் போகக்கூடியவர்கள் என்பதை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுவதையும் காணலாம். “அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். (அப்போது அவன் )“உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக (என் பிடிக்குள் )எடுத்துக் கொள்வேன்” என்றும்,
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் (அதிகமான ) கற்பனைகளை வளர்த்திடுவேன் என்றும் அதனால் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை (கடவிள்கள் பெயரில் ) கீறிக்கிழித்து விடும்படி அவர்களை ஏவுவேன் என்றும் மேலும் அல்லாஹ்வின் படைப்புகளின் அடிப்படை அமைப்பை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்.
எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.” (ஸூறா நிஸா:118, 119)
அல்லாஹ் தஆலா சிலரை கறுப்பாகவும், சிலரை வெள்ளை நிறமாகவும், சிலரை பொது நிறத்திலும் படைத்திருக்கிறான். அது தான் இறைவன் அவர்களுக்கும் விதித்திருக்கும் அடிப்படை நிறம். அந்த அடிப்படை நிறத்தை சிவப்பாக, வெள்ளையாக மாற்றுவது மேற்கூறிய அல்குர்ஆன் அல் ஹதீஸ் அடிப்படையில் குற்றமாகும்.
சிலவேளை நாம் வெயிலில் சென்றால் சூட்டின் காரணமாக தோல் அழுக்காகி கறுத்து விடும். அவ்வேளை தண்ணீர், சவர்க்காரமிட்டு கழுவி சுத்தமாக்குகையில் அழுக்குகள், ஊத்தைகள் நீங்கி தோல் அடிப்படை நிறத்திற்கு வந்து விடும். இது குற்றமாகாது. அதே போலத்தான், ஒருவர் விபத்துக்குள்ளாகிறார். அல்லது நோய்வாய்ப்பாடுகிறார். அதனால் தோலின் ஒரு பகுதி கருமையடைகிறது. இதற்கு சிகிச்சை செய்து அது வெள்ளை நிறமாக மாறினால் அதுவும் குற்றமாகாது.
இதுபோன்ற நிலமைகளில் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை சிகிச்சை செய்து மாற்றுவதென்பது வேறு. ஆனால், அல்லாஹ் எங்களை படைத்த அமைப்பை பொருந்திக்கொள்லாமல் தோலின் நிறத்தை மாற்றுவது சாபத்துக்குரிய பாவமாகும். கறுப்பாக இருப்பவர்கள் அசிங்கமானவர்கள், தாழ்த்தப்பாட்டவர்கள் எனக்கருதி நிறத்தை மாற்றுவோமெனில் அது, ஷைத்தானில் ஏவலின் பிண்ணனியில் செய்யும் அல்லாஹ்வின் படைப்பின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற காரியமாகும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இது ஹராமாகும்.
இப்படிப்பட்ட அழகு சாதனப்பொருட்களை, கிறீம்களை விற்பனை செய்யவும் கூடாது.
அது மருத்துவ ரீதியாக ஆபத்தானது. அது மிக விபரீதமான பதார்த்தங்களால் உற்பத்தி செய்திருப்பதன் காரணத்தால் நான் கேள்விப்பட்ட வகையில் வர்த்தக ரீதியகாவும் அதை தடை செய்துள்ளார்கள்.
ஆகவே சகோதரிகளே!
இது போன்றவை உடம்புக்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாது மார்க்க ரீதியாக தடை செய்யப்பட்ட காரியமுமாகும். நீஙகள் எந்த இறவனை நம்பியிருக்கிறீர்களோ அந்த அல்லாஹ் அதை உங்களுக்கு தடை செய்திருக்கிறான். அதை நீங்கள் செய்யக்கூடாது. அதை செய்வதால் நீங்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரிவர்களாக மாறுகிறீர்கள்.
அல்லாஹ் தஆலா மனிதனை வெள்ளையாகப்படைப்பதும் சோதனை தான். கறுப்பாக படைப்பதும் சோதனை தான். உலகில் கோடிக்கணக்கான மக்கள் கறுப்பினத்தைச்சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை திருப்தி படுத்தினால் சுவர்க்கம் போவார்கள்.
பிலால்(றழி) அவர்கள் ஒர் கறுப்பின ஸஹாபி. ஆனால், நபி(ஸல்) அவர்கள் சுவர்க்கத்தில் அவரது பாதணி சத்தம் கேட்குமளவுக்கு அல்லாஹ் அவரது அந்தஸ்த்தை உயர்த்தினான். இதற்கு முன் இப்பாவத்தை செய்தவர்கள் அல்லாஹ்விடத்தில் தெளபா செய்து கொள்ளுங்கள். அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிக்க காத்திருக்கிறான். அவன் என்றென்றும் மன்னிப்பாளான்.
இந்த பாவகாரியத்திற்காக வீண் செலவு செய்வதை விட்டு விடுங்கள். அநேக வருமானம் வருவதாகக்கூறி அவற்றை விற்பனை செய்பவர்களும் தவிர்ந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் அது பிழையான காரியமாகும். கறுப்பான பெண்கள் அவர்களுக்கு அல்லாஹ்வால் எழுதப்பட்ட கணவன் நிச்சயம் கிடைப்பான் என்பதை நம்புவதுதான் அவர்களின் ஈமானின் அடையாளம் .
எனவே நாம் எமது ஈமானை அழகு படுத்துவோம். நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குவோம். அதற்கு மாற்றமாக இது போன்ற மார்க்கம் தடுத்த காரியங்களைப் புரிந்து ஈமானையும் உடம்பையும் அசிங்கப்படுத்தாமலிருப்போம். அல்லாஹ்வை திருப்திப் படுத்தி ஈருலகிலும் வெற்றிபெறுவோம்
அல்லாஹ் தஆலாவே போதுமானவன்
பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)