2023-05-17 973

சுவனத்தில் பெண்களுக்காக பல ஆண் ஹூருலீன்கள் உண்டா?

கேள்வி: சுவனத்தில் பெண்களுக்காக பல ஆண் ஹூருலீன்கள் உண்டா?

பதில்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

ஆண்களுக்கு ஹூருலீன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் பெண்களுக்கும் ஆண் ஹூருலீன்கள் இருக்கிறார்களா? என்பது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. 

அல்லாஹ் தஆலா ஆண்களுக்கான ஹூருலீன்களைப்பற்றி சொல்லும் போது பெண்களை வர்ணித்து ஆண்களை கவரும் வகையில் சிலாகித்து கூறுகிறான். 

"மேலும், நாம் அவர்களுக்கு,  (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்”( சூரா தூர்:20)

"ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்” (சூரா ரஹ்மான்:72) 

“(ஹூர் என்னும் அக்கன்னியர்) மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்” (சூரா வாகிஆ: 23) 

அதே போல, ஹதீஸ்களிலும் சுவர்க்கத்தில் ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருப்பார்கள் என்பதாகவும் இடம்பெறுகிறது. 

அபூஹுரைரா(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது: (சுவனவாசிகளான) அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருவரினதும்  காலின் எலும்பு மஜ்ஜையும் அவளுடைய (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவளுடைய பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். (ஸஹீஹுல் புஹாரி 3246)

அடிப்படையில் ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார் இருப்பது உலகத்திலும் அவன் ஆசைப்படக்கூடிய ஓர் அம்சமாகும். அவனது அந்த ஆசைக்கேற்ப மறுமையில் அல்லாஹ் அந்த சுவனத்தில் ஹூருலீன்களை படைத்து வைத்திருக்கிறான்.ஆனால், பெண்களைப்பொறுத்தவரையில் இந்த விடயம் சார்பாக நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு விடயத்தையும் கூறவில்லை. 

அல்லாஹ் தஆலா மறுமை நாளில் பெண்களின் பண்புகளை வர்ணிக்கும் போது “காஸிராத்துத்’தர்ப்ஃ- தம் பார்வையை (தம் கணவனோடு ) தாழ்த்திக்கொண்ட அடக்கமான பெண்கள்” எனக்கூறுகிறான். 

“(சுவனபதிகளான) அவற்றில் அடக்கமான பார்வையுடைய கன்னியர் இருக்கின்றனர்” (சூரா ரஹ்மான்:56)

யதார்த்தத்தில் பெண்களைப்பொறுத்தவரையில், ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை அனுபவிக்க வேண்டுமெனும் இயல்பு உத்தமமான பெண்களிடம் கிடையாது.  உலக வாழ்வில் ஒரு பெண் தன் கணவனோடு இருக்கும் போது இன்னுமொரு கணவனை அனுபவிப்பதை நல்ல பெண்கள் விரும்புவதில்லை. 

ஆகவே, உலகில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களோடு வாழ விரும்பாத பட்சத்தில் அவர்கள் மறுமையில் பல ஆண்களோடு வாழ ஆசைப்படுவார்கள் என நாங்களாக கற்பனை செய்து கூறமுடியாது. ஆகவே, மறுமையில் பெண்களுக்கும் பல ஆண் ஹூருலீன்கள் இருப்பார்கள் எனக்கூறுவது பொருத்தமானதல்ல.  அவ்வாறு கூறுவதாயின் உலகில் பெண்கள் அவ்வாறு தான் ஆசைப்படுகிறார்கள் என சொல்லாமல் சொல்வது போலாகிவிடும். 

பொதுவாக அல்லாஹ் தஆலா சுவர்க்கத்தைப்பற்றி ஆசையூட்டுகின்ற போது ஆண்கள் அதிகமாக விருப்பம் கொள்ளும் பெண்கள், கட்டடங்கள், தோட்டங்கள் பற்றியும் பெண்கள் அதிகமாக விரும்பும் நகைகள், ஆடைகள் போன்றன பற்றியும் வர்ணிக்கிறான். இது போன்ற விடயங்களைத்தான் சிறப்புப்படுத்தி, சிலாகித்து கூறுகிறான்.

 உலக ஆசைகளுக்கப்பால் சுவர்க்கத்தில் பெண்கள் பல ஆண்களுக்கு ஆசைப்படலாம் எனக்கூறுவதும் பொருத்தமானதல்ல. பெண்கள் உலகில் ஆசைப்படாததை மறுமையில் ஆசைப்படுவார்கள் எனக்கூறி அவர்களுக்கும் பல ஆண் ஹூருலீன்கள் இருப்பார்கள் எனக்கூறுவதும் பொருத்தமல்ல.

 எனவே பெண்களுக்கு சுவனத்தில் பல ஆண்கள் ஒரே நேரத்தில் கணவர்களாக இருப்பார்கள் என்பது பொருத்தமில்லாத வாதம். அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. ஏற்கனவே நாம் கூறியது போல், சுவனத்து பெண்கள் பற்றி“பார்வையை தாழ்த்திக்கொண்டவரகள் ” என அல்குஆனில் இடம்பெறுவதால் பெண்களுக்கு சுவர்க்கத்தில் பல ஆண் ஹூருலீன்கள் இருப்பார்கள் எனக்கூறுவதும்  பொருத்தமாகாது. 

சுவர்க்கத்தில் தனக்கு ஒரு மனைவி இருந்தால் இவ்வுலகில் எவ்வாறு அவன் மாத்திரம் அவளை  அனுபவிக்க விரும்புவானோ அதற்கு மாற்றமாக மறுமையில் பலரும் அவரை அனுபவிக்க விரும்புவான் என நாங்களாக அதை கற்பனை செய்து கூறுவதும் பொருத்தமற்றதாகும் 

ஆகவே சுவர்க்கத்தில் பெண்களுக்கு பல ஆண் ஹூருலீன்கள் கொடுக்கப்படும் என்பது இல்லாததை உருவாக்கி வைக்கும் வாதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்களை அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் பெயரில் கூறுவதைதவிர்ந்து கொள்வோம்.  

அல்லாஹ் மிக அறிந்தவன்.

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி)  அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)