பெண்கள் காது குத்துவது அனுமதியா? தடுக்கப்பட்டதா?
பெண்கள் காது குத்துவது அனுமதியா? தடுக்கப்பட்டதா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
பெண்கள் காது குத்துவது அனுமதியா? தடுக்கப்பட்டதா?
இந்த கேள்வியானது குழந்தை பிறந்ததும் பலராலும் கேட்கப்படும் ஒரு கேள்வியாக இருக்கிறது. அநேகமானோர் இதை சாதாரணமாக செய்து வரும் அதே சந்தர்ப்பத்தில் சிலர் இதை ஹராம் என கூறுவதைக்காணலாம்.
ஆகவே, இந்த விடயத்தில் தெளிவு பெறுவது முக்கியமானதோர் தேவையாக இருக்கிறது.
உண்மையில் பெண்கள் காதணி அணிவதற்காக காது குத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியமன்று. அது அனுமதியான அம்சமாகும். காது குத்துவது குற்றமாகும் அல்லது ஹராமாகும் எனக்கூறுவது தவறாகும்.
இந்த அம்சத்தை பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம்.
பெண்கள் காது குத்துவது தடுக்கப்பட்டதாகும் எனக்கூறுவோர் முன் வைக்கும் ஆதாரங்கள்.
அல்லாஹ் தஆலா சூறா நிஸா 118 ஆவது வசனத்தில் ஷைத்தான் பின்வருமாறு கூறியதாக கூறிக்காட்டுகிறான்.
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் (அதிகமான) கற்பனைகளை வளர்த்திடுவேன். அதனால் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை (கடவுள்கள் பெயரில்) கீறிக்கிழித்து விடும்படி அவர்களை ஏவுவேன். மேலும் அல்லாஹ்வின் படைப்புகளின் அடிப்படை அமைப்பை மாற்றும்படியும் ஏவுவேன்” என்று கூறினான்.
மேலும்,
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அமைத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி 5931)
மேற்படி ஆதாரங்களின் படி பிறக்கும் போது குழந்தை காதில் ஓட்டையில்லாமல் பிறக்கிறது. ஆகவே ஓட்டையிட்டு காதணி அணிவிப்பது படைப்பினங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரியமாகும். படைப்பினங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஷைத்தான் எடுத்த சபதமாகும். மேலும் அது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய காரியமாகும். ஆகவே காது குத்தக்கூடாது எனக்கூறுகின்றனர்.
காது குத்துவது இறைவனின் சாபத்தை ஈட்டித்தரும் பாவகாரியமா?
அல்குர்ஆனிலும் மற்றும் ஹதீஸ்களிலும் படைப்பினங்களின் அமைப்பை மாற்றுதலோடு சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான தீர்ப்புக்களை மூன்று வகைகளாகப்பிரிக்கலாம்.
1)தடுக்கப்பட்டவை
2)மார்க்கமாக்கப்பட்டவை
3)அனுமதியானவை
இவை ஒவ்வொன்றையும் பற்றி உதாரணங்களோடு விரிவாகப்பார்ப்போம்.
இஸ்லாத்தில் படைப்பின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் சில அம்சங்கள் தடுக்கப்பட்டதாக இருக்கின்றன. உதாரணமாக மேற்கூறிய ஹதீஸில் இடம்பெறும் பொய் முடி சேர்ப்பது, புருவ முடியை பிடுங்குவது, பற்களை கூர்மையாக்குவது, பச்சை குத்துவது போன்றவற்றை கூறலாம்.
இதே வேளை, படைப்பின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் வேறு சில காரியங்கள் இறைவனின் கட்டளையாக இருக்கிறது.
அபூஹுறைரா(றழி) அவர்கள் அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம்(கத்னா) செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவைகளாகும். (ஸஹீஹுல் புகாரி 5891)
மேற்படி ஹதீஸில் இடம்பெறும் கத்னா, மர்ம உருப்பின் முடிகள் மற்றும் அக்குள் முடிகளை அகற்றுவது, மீசையை கத்தரிப்பது, நகம் வெட்டுவது அனைத்தும் படைப்பின் இயற்கையான அமைப்பில் மாற்றம் செய்வதாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவை சாபத்திற்குரிய காரியங்கள் என ஒருபோதும் சொல்லப்பட மாட்டாது. ஏனெனில், அல்லாஹ் தஆலா அவ்வாறு செய்வதைத்தான் சட்டமாக்கியிருக்கிறான். அதை நாம் கட்டாயம் செய்தாக வேண்டும். இவற்றை நாம் செய்யாமல் அதன் இயற்கை அமைப்பில் விட்டு விட்டோமென்றால் நாம் குற்றமிழைத்தவர்களாகிவிடுவோம். ஆகவே, படைப்பினங்களில் சில சந்தர்ப்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது மார்க்கமாக்கப்பட்டுள்ளது.
இதே போல, இன்னும் சில சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அவையும் படைப்பினங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரியங்களாகவே இருக்கின்றன. அந்த நடைமுறைகள் நபி(ஸல்) அவர்களது கால வழக்கில் இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அந்த நடைமுறைகளை அவதானித்தார்கள் ஆனால், தடுக்கவில்லை. அதாவது அதற்கு அனுமதியளித்தார்கள்.
உதாரணமாக, ஆண்கள் யூத, கிறிஸ்தவ அமைப்பில் அல்லாமலும் நபி(ஸல்) அவர்கள் தடுத்த முறையிலல்லாமலும் தலைமுடியை சாதாரணமாக வெட்டிக்கொள்வது. இது அனுமதியாகும்.
இவ்வாறு அனுமதியான அமைப்பில் உள்ளடங்கும் மற்றுமொரு உதாரணம் தான் பெண்கள் காது குத்தி காதணி அணிவதாகும். நபி(ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த வழக்கை கண்ணுற்றார்கள். பெண்கள் காதணி அணிவதை அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் அதை தடுக்கவில்லை. அக்கால பெண்கள் காதணி அணிந்தமை பல ஹதீஸ்களில் இடம்பெறுவதைக்காணலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை பெருநாள் தினத்தில் உரை நிகழ்த்திய சந்தர்ப்பத்தில் பெண்களை நோக்கி தர்மம் செய்யுமாறு ஆர்வமூட்டினார்கள். இந்த ஹதீஸ் நீண்ட ஒரு செய்தியாக பதிவகியுள்ளது. அதன் இறுப்பகுதியில் பின்வருமாறு இடம்பெறுகிறது.
‘அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால்(ரலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) (ஸஹிஹ் முஸ்லிம்1607)
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஆயிஷா(றழி) அவர்கள் சில பெண்கள் ஒன்றுசேர்ந்து தத்தமது கணவர்களைப்பற்றி தமக்குள் பேசிக்கொண்டதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அதில் இறுதியாக ஒரு பெண் கூறியதாவது-
என் கணவர் (பெயர்) அபூ ஸர். அபூ ஸர் எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஸஹீஹுல் புகாரி 5189)
சகோதரர்களே! அடிப்படையில் காதணி அணிவதென்பது காதில் ஓட்டையிட்டே அணிவது வழக்கம். சிலர் ஓட்டையிடாமலும் அணிவர்.
ஆகவே, மேற்படி சந்தர்ப்பங்களில் காதணி அணிந்ததை நபி(ஸல்) அவர்கள் அறிகிறார்கள். ஆனால் அதை தடுக்கவில்லை. அதை தவிர்ந்துகொள்ளுமாறு கூறவுமில்லை. அது சாபத்திற்குரிய காரியமாக இருந்திருந்தால் தடுக்கப்பட்ட காரியங்களோடு அதையும் எங்களுக்கு பட்டியலிட்டு கூறியிருப்பார்கள்.
இங்கு நாம் அறிய வேண்டிய முக்கிய விளக்கம்-
ஒரு வழக்கு நபி(ஸல்) அவர்களது கால நடைமுறையிலிருந்து, நபி(ஸல்) அவர்கள் அதை அறிந்தும் அது தடுக்கவில்லை என்றிருந்தால் அது அனுமதியான காரியமாகும்.
இதை பின்வரும் ஹதீஸ் எங்களுக்கு அழகாக தெளிவுபடுத்துகிறது.
ஜாபிர்(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
குர்ஆன் இறங்கிக்கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்ல்(புணர்ச்சி இடைமுறிப்பு) செய்வோராக இருந்தோம். அது நபி(ஸல்) அவர்களுக்கு தெரிய வந்தது. ஆனால் அவர் எங்களை தடுக்கவில்லை” [ஸஹீஹ் முஸ்லிம்1440]
இங்கு நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடப்பதை அறிந்திருந்தர்கள். அல்குர்ஆனும் அவர்களுக்கு இறங்கிக்கொண்டிருந்தது ஆனால் அதை தடுக்கவில்லை. அந்த நடப்புகளில் ஏதாவது தவறுகள் இருக்குமானால் அது நபியவர்களுக்கு வஹியாக இறக்கப்பட்டிருக்கும். நபி(ஸல்) அவர்கள் அதை மார்க்கமாக எத்தி வைப்பார்கள்.
ஆகவே, இங்கு நாம் எடுக்கும் சட்டம் என்னவென்றால் ஒரு வழக்கு நபி(ஸல்) அவர்களது காலத்திலிருக்க- அது தடுக்கப்படவில்லை என்றிருந்தால் அது ஹலால்-அனுமதியான காரியமாகும்.
அந்த அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் அக்கால வழக்கிலிருந்த பொய் முடி சேர்ப்பது. புருவ முடியை பிடுங்குவது, பற்களை கூர்மையாக்குவது, பச்சை குத்துவது போன்ற காரியங்கள் ஹராமாகும். அவற்றை தடுத்தார்கள். ஆனால் அதே காலத்தில் வழக்கிலிருந்த காது குத்துவதை தடுக்கவில்லை. அது அல்குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ தடுக்கப்படவில்லை.
அல்லாஹ் தஆலா பெண்களுக்கு இந்த அலங்காரத்திற்கு அனுமதியளித்துள்ளான்.
முடிவாக
சூறதுல் நிஸா இல் இடம்பெறுவது படி ஷைத்தான் எடுத்த சபதமானது படைப்பினங்களில் கைவைத்தல் என்பதை பொத்தாம் பொதுவாக அனைத்து காரியங்களையும் முற்றாக பொதிந்துகொள்ளாது. மாறாக, அது நபி(ஸல் ) அவர்கள் தடுத்ததாக வரும் காரியங்களையும், அது சார்ந்த காரியங்களையும் பொதிந்து கொள்ளும். மற்றும் படி நபி(ஸல்) அவர்களது காலத்தில் வழக்கிலிருந்தும் நபியவர்கள் தடுக்காது அனுமதி வழங்கிய விடயங்களை அது பொதிந்து கொள்ளப்போவதில்லை.அவை சாபபத்துக்குரியதாகவும் கருதப்படவும் மாட்டாது.
சகோதரர்களே!
இங்கே நாம் கருத்திற்கொள்ள வேண்டிய மேலும் ஒர் முக்கிய விடயம் இருக்கிறது.
அதாவது இன்றளவில் உலகில் பல நவீன அழகுக்கலையோடு சம்பந்தப்பட்ட காரியங்கள் இருக்கின்றன. உதாரணமாக சொல்வதாயின் மூக்கின் அமைப்பை பிளாஸ்டிக் சேஜரி செய்து அழகு படுத்துகிறார்கள்.மேலும் மற்றைய அங்கங்களின் அழகையும் பற்பல சிகிச்சைகள் மூலம் அழகு படுத்துகிறார்கள். இது போன்ற விடயங்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் அறியப்பட்டதாக இருக்கவிலையென்றிருந்தாலும் அவையும் அல்லாஹ் தஆலா’வினது படைப்பினங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் காரியங்கள் என்பதில் சந்தேகமில்லை. இவை தெளிவான பாவமாகும். நாம் மேற்குரிய ஹதீஸில் இடம்பெறும் அல்லாஹ்வின் சாபத்தை விதியாக்கும் பாவகாரியங்களோடு சம்பந்தப்பட்டவையாகும் என்பதையும் மனதில் நிறுத்திக்கொள்வோம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)